பேருந்து நிலையத்தில் கிடந்த 3 பைகள்... உள்ளே நகர்ந்த 97 நட்சத்திர ஆமைகள் - வனத்துறை விசாரணை!
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ரோந்து பணியில் புதுக்கோட்டை நகர காவல்துறையினர் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை சோதனை செய்தனர். அவற்றில் நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டு அந்த பைகளை கைப்பற்றிய காவல்துறையினர், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அந்த பைகளை சோதனையிட்டபோது, அவற்றில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 97 நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர், இது சம்பந்தமாக புதுக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த புதுக்கோட்டை வனத்துறையினர் 97 நட்சத்திர ஆமைகளையும் பெற்றுக்கொண்டு, அவற்றை சென்னைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவ குணமிக்க இத்தகைய நட்சத்திர ஆமைகள் என கருதப்படும் ஆமைகள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் யாரால் கொண்டுவரப்பட்டது என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், இது சம்பந்தமாக கடத்தலில் ஈடுபட்ட நபர் யார், எங்கிருந்து இந்த ஆமைகள் கொண்டுவரப்பட்டன... இந்த ஆமைகளை எங்கு விற்பனை செய்ய இருந்தன.... இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை துவக்கி உள்ளனர். அதோடு, இன்னொருபக்கம் வனத்துறையினரும் இது சம்பந்தமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்த 97 நட்சத்திர ஆமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


