500 விவசாயிகள், கோடிக்கணக்கில் வர்த்தகம்... ஆர்கானிக் பொருள்கள் விற்பனையில் அசத்தும் பட்டதாரி!

இயற்கை விவசாயத்தில் ரசாயான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. மக்களிடம் இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி ராஜஸ்தான் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் சாதித்துள்ளார்.

விற்பனையில்

ராஜஸ்தான் மாநிலம், புஷ்கர் என்ற இடத்தை சேர்ந்தவர் தீபக் சபர்வால். எம்.பி.ஏ.பட்டதாரியான தீபக் டெல்லியில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் விவசாயத்தில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது.

விவசாயிகள் கூட்டம்

எனவே ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை பஸ் மூலம் 400 கிலோமீட்டர் பயணம் செய்து தனது சொந்த ஊருக்கு வந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விவசாயம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த இரண்டு நாளில் வேறு எந்த வேலையையும் அவர் செய்வது கிடையாது. இப்படியே மூன்று ஆண்டுகள் விவசாயம் செய்த தீபக், ஒரு கட்டத்தில் விவசாயத்தை முழு நேரமாக செய்ய முடிவு செய்தார்.

தீபக் எவ்வாறு இயற்கை விவசாயத்திற்கு மாறினார் என்பது குறித்து கூறுகையில்,விஷமிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை நிலத்திற்கும், பயிர்களுக்கும் கொடுக்கிறோம் என்பதை உணர்ந்த போது மிகவும் கடினமாக இருந்தது. ரசாயனத்தில் விளைவிக்கப்பட்ட பொருள்களை சாப்பிடுவதோடு அதை விற்பனை செய்வதையும் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால், இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள முடிவு செய்தேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டு மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவில் குறைந்த செலவில் இயற்கை விவசாயம் செய்வதை தெரிந்து கொண்டேன். மாட்டுச்சாணம் மற்றும் மண்புழு உரம் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

தீபக் சபர்வால்

நிலம் தனது பழைய தன்மைக்கு மாறியவுடன் முதலில் பயறு வகைகளையும் பூக்களையும் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இதில் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தபோது கிடைத்த மகசூல் கிடைக்கவில்லை என்றாலும், பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை உரம் இல்லாமல் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்ற திருப்தி இருந்தது. இரண்டு ஆண்டு இயற்கை விவசாயம் சோதனை அடிப்படையில் சிறிய அளவில் செய்து பார்த்துவிட்டு பின்னர் முழுமையாக 21 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பொருள்களை எனது நண்பர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தோம். எங்களுடைய பொருள்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததால் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தோம். அதோடு பேஸ்புக் பக்கம் மற்றும் வாட்ஸ் ஆப் குரூப்பும் ஆரம்பித்தோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு தானியங்களை நாங்களே எங்களது வாகனத்தில் எடுத்துச்சென்று டெலிவரி செய்தோம்.

டெல்லி மெட்ரோபாலிடன் பகுதிக்கு பஸ்களில் அனுப்பி வைக்கிறோம். எர்த்தி டாலெஸ் என்ற எங்களது கம்பெனியை 2017-ம் ஆண்டு ஆரம்பித்தோம். அதன் மூலம் பழங்கள், காய்கறிகள், நெய், உணவு தானியம், பருப்பு வகைகள் என 300 வகையான பொருட்களை விற்பனை செய்கிறோம். தேவை அதிகமாக இருந்ததால் சிறு விவசாயிகளிடமும் இயற்கை விவசாயத்திற்கு மாறும்படி கேட்டுக்கொண்டோம். இதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் கொடுத்ததோடு அவர்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யவும் நாங்கள் உதவி செய்கிறோம். இதன் மூலம் அவர்களது பொருட்களுக்கு அதிக விளையும் கிடைத்தது. இயற்கை விவசாயத்திற்கு மாறி மூன்று ஆண்டுகள் கழித்து வழக்கமாக கிடைக்கும் மகசூல் கிடைக்கும். எனவே விவசாயிகளிடம் ஆரம்பத்தில் 30 முதல் 50 சதவீத நிலத்தில் மட்டும் இயற்கை விவசாயம் செய்யும்படி ஆலோசனை கூறுவதோடு பயிற்சியும் கொடுத்தோம். இதுவரை 500 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய கற்றுக்கொடுத்து இருக்கிறோம்.

விவசாயிகளுக்கு பயிற்சி

இது தவிர ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் இரண்டு பயிற்சி மையம் மற்றும் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் மையங்களையும் தொடங்கி இருக்கிறோம். ஆரம்பத்தில் டெல்லிக்கு வாரத்தில் எனது காரில் இரண்டு முறை மட்டும் காய்கறிகளை எடுத்துச்செல்வோம். ஆனால், இப்போது தினமும் இரண்டு முறை எடுத்துச் செல்கிறோம். இதன் மூலம் ஆண்டுக்கு 4 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. 500 விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். எங்களிடம் 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.