Doctor Vikatan: அதிக புரதச்சத்து கிட்னியை செயலிழக்கச் செய்யுமா... எந்த அளவு உணவில் சேர்க்கலாம்?
Doctor Vikatan: என் நண்பனுக்கு வயது 27. ஜிம்மில் சேர்ந்து வொர்க் அவுட் செய்கிறான். ஜிம்மில் சேர்ந்தது முதல் சதா சர்வகாலமும் புரோட்டீன் உணவுகளைத் தேடித் தேடிச் சாப்பிடுகிறான். ஒரு நபருக்கு புரதச்சத்து எந்த அளவுக்கு முக்கியம்...? அது அளவுக்கு அதிகமானால் கிட்னியை பாதிக்கும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, உணவு விஷயத்துக்கு மிகப் பொருத்தமான வாசகம். அது எல்லாச் சத்துகளுக்கும் பொருந்தும். ஒருவரது எடையில் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் புரதம் தினமும் தேவை. அதாவது, 50 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு புரதச்சத்து அவசியம். நம் உடலால் புரதச்சத்தை உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலம்தான் அதை நாம் உடலுக்குக் கொடுக்க முடியும்.
6 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு பெரியவர்கள் எடுத்துக்கொள்வதிலிருந்து 3-4 கிராம் குறைவாக கொடுக்கலாம். 6 வயதுக்குப் பிறகு அவர்களுக்கும் எடைக்கேற்ற அளவுதான் பரிந்துரைக்கப்படும். ஒவ்வொரு வேளை உணவிலும் 20 சதவிகிதம் புரதச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்பற்றுவதால், புரதச்சத்து உடலில் சேமிக்கப்படாது.
பருப்பில் தொடங்கி, ஆட்டுக்கறிவரை பல உணவுகளில் புரதச்சத்து இருக்கிறது. புரதச்சத்து இருப்பதாலேயே எல்லா உணவுகளும் ஆரோக்கியமானவை என அர்த்தமில்லை. புரதத்தோடு சேர்த்து அதில் வேறு என்னவெல்லாம் இருக்கின்றன, கொழுப்புச்சத்து எவ்வளவு இருக்கிறது, நார்ச்சத்து அதிகமிருக்கிறதா என்பதையும் பார்த்தே தேர்வு செய்ய வேண்டும்.

புரதம் தேவைதான். ஆனால், அதற்காக புரதத்தைவிடவும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது ஆபத்தானது. எனவே, எந்த மாதிரியான புரதம் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்.
தேவைக்கு அதிகமான புரதச்சத்து எடுப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட பிரதான உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். வழக்கமாக யாரும் உடலில் புரதத்தின் அளவை செக் செய்வதில்லை. வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, அதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளைச் செய்யும்போதுதான் உடலில் புரதம் அதிகமிருப்பது தெரியவரும். புரதத் தேவைக்காக ஒரு நாளைக்கு பத்து முட்டைகள், சிக்கன் என அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதும் தவறு. உங்கள் நண்பருக்கு இதைப் புரிய வையுங்கள். பாடி பில்டிங் மாதிரியான உடல் கட்டுமானம், உடல் உறுதி தொடர்புள்ள துறைகளில் ஈடுபடுவோர் என்றால், அவர்களுக்கான புரதத் தேவை சற்று வேறுபடும். வெறும் உடற்பயிற்சிக்காக உங்கள் நண்பர் அதிக புரோட்டீன் எடுப்பது தேவையற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


