விட்டு விட்டு விழும் தூறல்... ஓயாத குளிர்க்காற்று... கலவையான காலநிலைக்குக் காரணம் என்ன?
ஆடி மாசம் பிறப்பதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. ஆனால், கடந்த 3 நாள்களாக விட்டு விட்டு விழும் தூறல், சில நேரங்களில் மழையோடு காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது.
ஒரு கலவையான சீதோஷ்ண நிலை தமிழகம் முழுவதுமே நிலவி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இப்படியொரு சீதோஷ்ண நிலை இதமான சூழல் என்றாலும் அவ்வப்போது தூறலும், அதனோடு பெய்யும் மழையும் சில பணிகளை மேற்கொள்ள தடையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் பேசியபோது, "அரபிக் கடலில் நிலவும் தென்மேற்குப் பருவ காற்றால் கேரளா, கர்நாடகாவில் மழை பெய்து வருகிறது. அதேபோல் வடமேற்கு பகுதியில் அதாவது ஒடிசாவிற்கு அருகே குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியிருக்கிறது. அதனால் வட தமிழகம், ஆந்திராவில் விட்டு விட்டு தூறல் முதல் கனமழை வரை பெய்கிறது. வங்க கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த நிலையால் அங்கிருந்து வரும் மழைக் காற்றும், இங்கிருக்கும் வெப்பக்காற்றும் சந்திக்கிறது. அதனால்தான் இந்த தூறலுடன் கூடிய காற்று வீசுகிறது. மழையும் பெய்கிறது.

கடந்த மூன்று நாள்களாக வட தமிழகத்தில் இந்தச் சூழல் நிலவுகிறது. அநேகமாக நாளை மாலை இந்த தூறல் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை தென்மேற்குப் பருவமழையால்தான். பொதுவாக தென்மேற்குப் பருவ மழையின்போது பகலில் நன்கு வெப்பமும், மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். அரபிக் கடலில் அடர்ந்த காற்றழுத்தம் இருந்து வருகிறது. அதனால் மேற்கு மற்றும் மத்திய தமிழகத்தில் குளிர்காற்று வீசுகிறது" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


