50 ரூபாய் ஆசைகாட்டி 3 லட்சம் திருட்டு - ஆந்திர இளைஞர் சிக்கிய பின்னணி!

சென்னை ஆழ்வார்திருநகர், கைகான் குப்பம், வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் பாரதி (23). இவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். கடந்த 3.4.2024-ம் தேதி வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாயை பாரதி எடுத்தார். பின்னர் அந்தப் பணத்தை பெட்ரோல் டேங்கின் கவரில் வைத்த பாரதி, வீட்டுக்கு பைக்கில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது பாரதியின் வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவர், சார், 50 ரூபாய் சாலையில் கிடக்கிறது. அது உங்களுடையதா என்று பைக்கில் வந்த பாரதியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பாரதி கீழே கிடந்த 50 ரூபாயை பார்க்க பைக்கை விட்டு கீழே இறங்கினார். இந்தச் சமயத்தில் பாரதியின் கவனத்தை திசைதிருப்பி டேங்க் கவரிலிருந்த 3 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு அந்த நபர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

ராஜசேகர்

இதுகுறித்து வளசரவகாக்கம் காவல் நிலையத்தில் பாரதி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஓ.ஜி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (32) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 35 ஆயிரம் ரூபாய் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜசேகர் மீது திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்பட ஏழு வழக்குகள் உள்ளன. விசாரணைக்குப் பிறகு ராஜசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.