`பாலியல் தொழிலை தடுக்கவில்லை...!’ - வேலூர் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை பின்னணி!
வேலூர், சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மீது புகார்கள் வரிசைக்கட்டியதால், அவரை `ஆயுதப்படை’க்கு மாற்றி நடவடிக்கை எடுத்திருக்கிறார் எஸ்.பி மணிவண்ணன். இது குறித்துப் பேசுகிற வேலூர் போலீஸார், ``சத்துவாச்சாரி காவல் நிலைய லிமிட்டில் `ஸ்பா’ என்ற பெயரில் `பாலியல்’ தொழில் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அதைத் தடுத்து நிறுத்தாமல், இன்ஸ்பெக்டர் `மாமூல்’ சர்ச்சைகளில் சிக்கினார். இந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த நிஷா என்பவர், சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் கடந்த 2 மாதங்களாக கடை எடுத்து, ஸ்பா நடத்தி வருவதாக புகார்கள் வந்துகொண்டிருந்தன.
நிஷாவின் சொந்தப் பெயர் ஆர்த்திகா. இந்தப் பெயர் வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால், காவல்துறையினர் உட்பட பெரும் புள்ளிகள் பலருக்கும் நிஷா பரிட்சியமானவர்தான்.
கடந்த 9 ஆண்டுகளாக வேலூர் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் `தொழில்’ நடத்தி வரும் நிஷா குறித்த புகார்கள்மீதும் இன்ஸ்பெக்டர் ராஜா நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து, எஸ்.பி விளக்கம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. `இல்லை’ என்று இன்ஸ்பெக்டர் தரப்பில் பதில் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜாவுக்குத் தெரியப்படுத்தாமல், டவுன் டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார், நிஷா நடத்தி வந்த ஸ்பாவில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அப்போது, 4 பெண்கள், ஸ்பா மேலாளரான ஒரு ஆண் ஆகியோர் பிடிபட்டனர். நிஷா மட்டும் சிக்கவில்லை. தலைமறைவாகிவிட்டார். போலீஸார் நிஷாவை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தால்தான் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்துக்கு அருகிலுள்ள லாட்ஜிலும் பாலியல் தொழில் நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், சத்துவாச்சாரி லிமிட்டில் தொடர்ச்சியான மோதல்களால் பொது மக்களும் அச்சமடைந்திருக்கிறார்கள். குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம், புகாரளிக்க வரும் பொது மக்களிடமும் தன்மையாக நடந்துகொள்வதில்லை எனவும் அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தததால், இன்ஸ்பெக்டர் ராஜா மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது’’ என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


