Copa América: மெஸ்ஸியைக் கௌரவப்படுத்திய இளம் தலைமுறை; அர்ஜெண்டினா 16வது முறை சாம்பியனானது எப்படி?

உண்மை மிகவும் விசித்திரமானது. எந்தவொரு வீரரின் விளையாட்டு ஆளுமையையும் கோப்பைகளால் மட்டுமே நீங்கள் அளவிட்டுவிட முடியாது. குறிப்பாக ஒரு குழு விளையாட்டில் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல், ஒரு விளையாட்டு வீரர் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது திறமை நிர்ணயிக்கப்படவேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் அணியின் தோல்விக்காகத் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்ட ஜாம்பவான்தான் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி.
Copa América

அன்று தனது சொந்த நாட்டிற்காக ஒரு கோப்பையை வெல்ல முடியாத நிலையில், உலகில் நம்பர் ஒன் வீரராக இருந்த மெஸ்ஸி, “உங்களிடம் எத்தனை செல்வங்கள், புகழ், வசதி வாய்ப்பு இருக்கிறது என்பதெல்லாம் முக்கியமே இல்லை. இவை இல்லையென்றாலும் அது ஒரு விஷயமேயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் திறமையின் உச்சநிலையைப் பார்க்க உழைத்துக்கொண்டே இருங்கள், அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருங்கள், அது நிச்சயமாகக் கிடைத்துவிடும்” என்றார். இன்று கணுக்கால் காயத்தின் வலியோடு தன் நாட்டிற்காக 16வது கோப்பா அமெரிக்கக் கோப்பையை வென்று அந்த உச்சத்தை ருசித்திருக்கிறார் இந்த அர்ஜெண்டினா வீரன்.

Lionel Messi - Copa América

2014, 2015 மற்றும் 2016 ஆகிய 3 ஆண்டுகளில் 3 இறுதிப் போட்டிகளில் போராடித் தோல்வியடைந்தார் மெஸ்ஸி. அதில் ஒரு உலகக் கோப்பை மற்றும் 2 கோப்பா அமெரிக்கா போட்டிகளும் அடங்கும். இந்தத் தோல்விகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பில்லை என்றாலும் “துரோகி”, “தேசத்திற்காக எதையும் செய்யவில்லை” என்ற பட்டங்கள் அவருக்கு வந்தன. 2016-ம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்தே வெளியேறுகிறேன் என்ற ஓய்வு அறிவிப்பையும் அறிவித்தார். உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கடிதங்களிலும், இணையத்திலும் அந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் களத்திற்குள் வந்தார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் தனது கால்களில் தூரிகைக் கட்டிக்கொண்டு “வாழ்க்கை ஒரு வட்டம்” என்று எழுத ஆரம்பித்தார் என்றும் சொல்லலாம்.

ஏனெனில் மீள் சக்கரத்தில் சுழல்வது போல மீண்டும் மூன்று இறுதிப் போட்டிகள். இம்முறை 2021-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா, 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை, 2024-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா என்ற அதே மாதிரியான சூழல்கள். ஆனால் இம்முறை தோல்வியல்ல வெற்றி என்று தன் அனுபவத்தால் கோப்பைகளை வென்று முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார் கால்பந்தின் அரசன்! இதுவரை யாரும் வென்றிடாத 45 முக்கிய கோப்பைகளின் சொந்தக்காரராகப் பிரேசிலின் டானி ஆல்விஸின் முந்தைய சாதனையை முறியடித்துக் காயப்பட்ட சிங்கத்தின் கர்ஜனை எப்படியிருக்கும் என்பதை உலகத்துக்குக் காட்டியிருக்கிறார்.
Copa América

அர்ஜெண்டினாவின் 16வது கோப்பா அமெரிக்கா கோப்பை இது. இதன் மூலம் அதிகமுறை கோப்பா அமெரிக்கப் போட்டிகளை வென்ற அணி என்கிற உருகுவே அணியின் சாதனையை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. தொடர்ந்து மூன்று முக்கிய கோப்பைகளைக் கைப்பற்றியிருக்கும் இந்த வெற்றி அர்ஜெண்டினா அணிக்கு மிக முக்கியமானது. எப்போதெல்லாம் அர்ஜெண்டினா தோற்கிறதோ அப்போதெல்லாம் ஒரு புகைப்படம் பகிரப்படும். அதில் தனியொருவராகப் மெஸ்ஸி போராடினார், மெஸ்ஸியின் மீதே மொத்த பாரமும் இருந்தது, அதனால் வெல்ல முடியவில்லை என்பதை சித்திரித்திருக்கும். அதேபோல கோப்பை ஜெயித்த 2021, 2022 ஆண்டுகளின் தேசிய அணிக்கான வெற்றியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மெஸ்ஸியிடமேயிருந்தது. ஆனால் இம்முறை வெல்லப்பட்ட கோப்பை முழுக்க முழுக்க இளம் ரத்தத்தில் எழுதப்பட்ட வெற்றி சரித்திரம்.

மெஸ்ஸி குழந்தைகளாகக் கைபிடித்து அழைத்துச் சென்ற இளம் வீரர்கள், இன்று மெஸ்ஸியின் தோளுக்கு மேல் வளர்ந்து அவர் கோப்பையைக் கைப்பிடிக்கக் காரணமாக அமைந்திருக்கிறார்கள். ஆம், இந்த சீசனில் காயங்களுடன் சிரமப்பட்ட மெஸ்ஸி அரை இறுதிப் போட்டியில் ஒரு கோல், குரூப் போட்டிகளில் ஓர் அசிஸ்ட் என்றளவில் சிறிய பங்களிப்பை மட்டுமே அளித்திருந்தார். மேலும் குரூப் ஸ்டேஜில் ஒரு பெனால்டியையும், ஈகுவேடாருக்கு எதிரான கால் இறுதியில் ஒரு பெனால்டியையும் மிஸ் செய்திருந்தார். ஆனால் அப்போதெல்லாம் இளம் வீரர்களான லாட்டாரோ மார்டினெஸ், ஜூலியன் அல்வாரெஸ் தங்களின் பங்களிப்பை உறுதி செய்து அணியை முன்னுக்குக் கொண்டு சென்றனர். அதிலும் குறிப்பாக “என்ன மீறித் தொட்றா பார்க்கலாம்" என்று மாஸ் பிஜிஎம் போட்டு அர்ஜெண்டினாவின் படைத் தளபதியாகப் பல முக்கிய போட்டிகளில் அரணாக நின்றார் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்.

எமிலியானோ மார்டினெஸ்
காலிறுதி போட்டி டிராவாகிவிட, முதல் பெனால்டி ஷூட் அவுட்டில் முதல் வாய்ப்பையே பனேகா ஷாட் அடித்துத் தவறவிடுகிறார் மெஸ்ஸி. பல இறுதிப் போட்டிகளில் நடந்த கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாலும், “எமிலியை நம்பினோர் கைவிடப்படார்” எனத் தொடர்ந்து இரண்டு பெனால்ட்டி ஷூட்டுகளைத் தடுத்து அடுத்த சுற்றுக்குக் கொண்டு சென்றார் எமிலி.

அப்போது அவர் கூறியது, "இந்தத் தொடரில் காலிறுதியோடு வெளியேறும் எண்ணம் எங்களுக்கில்லை. அதுவும் இவ்வாறாகத் தோற்று வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அர்ஜெண்டினாவின் முதலாவது பெனால்டியை மெஸ்ஸி தவறவிட்டதும், 2016-ம் ஆண்டினைப் போலக் கண்ணீருடன் மைதானத்தில் நிற்கும் மெஸ்ஸியை எங்களால் பார்க்க இயலாது. இந்த அணி மெஸ்ஸிக்காக எதையும் செய்யும். காரணம் அவன் எங்கள் தலைவன்!” என்று கர்ஜித்தார். இப்படியான மெஸ்ஸியின் தளபதிக்கு இந்தத் தொடருக்கான கோல்டன் கிளவுஸ் கைக்கு வந்து சேர்ந்ததுள்ளது.

2024-ம் ஆண்டின் கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே எதிர்பார்ப்பு எகிறியிருந்தது, ஏனெனில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொலம்பியா அணி, தலைமைப் பயிற்சியாளராக நெஸ்டர் லோரென்சோவின் மேற்பார்வையில் தொடர்ந்து 28 போட்டிகளில் தோல்வியே அடையாத இமாலய சாதனையைப் படைத்திருந்தது. 2022-ம் ஆண்டு FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி கூடப் பெறத் தவறிய அந்த அணி லோரென்சோவுடன் இணைந்து, அரையிறுதியில் வலுவான உருகுவேயை வீழ்த்தி முரட்டு பார்மில் இருந்தது. இதனால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிகாலை மியாமி நகரிலிருக்கும் ஹார்ட் ராக் மைதானத்தில் போட்டி தொடங்கியது.

மைதானத்திற்கு வெளியே சட்ட ஒழுங்கு கட்டுக்கடங்காத சூழல்

போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்திற்கு வெளியே சட்ட ஒழுங்கு கட்டுக்கடங்காத சூழல் ஏற்பட்டதால் போட்டி 80 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. அதில் முதல் பாதி முழுக்க எந்த அணியும் கோல் கணக்கைத் தொடங்க முடியாத வண்ணம் கடுமையான போட்டி நிலவியது. இதற்கிடையே இடைவேளையில் கொலம்பியா பாடகி சாஹிராவின் இசை நிகழ்ச்சி நடக்க இரண்டாம் பாதி, 25 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இதற்கு கொலம்பியா பயிற்சியாளர் லொரான்ஸோ கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இரண்டாம் பாதி தொடங்கிய 64வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மைதானத்தில் சுருண்டு விழுந்தார். ஏற்கெனவே காயத்தில் அவதியுற்றவர் மேற்கொண்டு போட்டியில் தொடர முடியாத சூழலில் மைதானத்தை விட்டுத் தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைப் போல அழுதுகொண்டே வெளியேறினார். அவரது கணுக்கால் காயம் அனைவரையும் திகைப்புக்குள் ஆழ்த்தியது.

போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பேசிய அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, "அவர் ஒருபோதும் ஆடுகளத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. அவர் கணுக்கால் வீங்கியிருந்தாலும் தொடர்ந்து விளையாட விரும்பினார். அவர் ஆடுகளத்திலேயே வாழப் பிறந்தவர்” என்றார். மெஸ்ஸி இல்லாத நிலையில் ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் மீதமிருந்தபோது அர்ஜெண்டினா வீரர்கள் ஒரு கோலினை அடித்தனர். ஆனால் அது ஆப் சைட் முறைப்படி நிராகரிக்கப்பட்டது.

லாட்டாரோ மார்டினெஸ்

பால் பொசஷன் என்று சொல்லக்கூடிய பந்தைக் காலில் தக்க வைக்கும் பணியை செவ்வனே செய்தது கொலம்பியா அணி. இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்குச் சென்றது. அந்த நிலையில் ஆட்டத்தின் 97-வது நிமிடத்தில் லாட்டாரோ மார்டினெஸ் களத்துக்குள் இறங்கினார். அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இரண்டு பக்கமும் ஆட்டக்காரர்கள், போர் வீரர்களைப் போல அடித்து மாய்ந்து கொண்டிருக்க, ஆட்டத்தின் 112 நிமிடத்தில் லாட்டாரோ மார்டினெஸ் வெற்றிக்கான கோலினை உறுதி செய்தார். இந்தத் தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற வகையில் கோல்டன் பூட்டும் (Golden Boot) அவரிடம் வந்து சேர்ந்தது.

மெஸ்ஸி, டி மரியா மற்றும் நிக்கோலஸ் ஓட்டமெண்டி

கோப்பையைப் பெற்றுக்கொள்ள வந்த கேப்டன் மெஸ்ஸி இந்தத் தொடரோடு ஓய்வை அறிவித்துள்ள நட்சத்திர வீரரான டி மரியா மற்றும் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஆகியோரையும் அழைத்துச் சேர்ந்தே கோப்பையைப் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு 2022-ம் உலகக்கோப்பையை வென்றபோது நிகழ்த்திய அதே மாதிரியான ஒரு கொண்டாட்டத்தினை நிகழ்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுவே மெஸ்ஸியின் கடைசி கோப்பா அமெரிக்கப் போட்டியாக இருக்கும் என்ற நிலையில் “உங்கள் திறமையின் உச்ச நிலையைப் பார்க்க உழைத்துக்கொண்டே இருங்கள், அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருங்கள், அது நிச்சயம் கிடைத்துவிடும்” என்ற தன் மந்திர அஸ்திரத்தை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் சென்றிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.