குடமுழுக்கு விழாவில் பேனர் வைப்பதில் தகராறு; கட்டை, கற்களால் தாக்கி கொண்ட 2 தரப்பினர்- நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி கிராமத்தில் இருக்கும் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அந்த கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தினர் ஃப்ளெக்ஸ் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, காவல்துறையினர் ஊர் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகளிடம் பேசி, முடிவெடுத்து இனிமேல் பொது இடங்களில் ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்னைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் மாற்று சமூகத்தினர் சிலர் வந்தபோது இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்டைகள், கற்களால் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்தவர்களை தாக்கம் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

அடிதடி நடந்த இடம்

இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து காவல்துறையினருக்கு முன்பே தெரிந்ததால், அதற்காக காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தும் எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது எனக் கூறி இரு பிரிவினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதோடு, அப்பகுதியில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். கோயில் கும்பாபிஷேக விழாவின் போது பேனர் வைத்த பிரச்னையில் இரு தரப்பு இளைஞர்களிடையே வெடித்த மோதல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.