``பால் பண்ணை அமைக்க முன்வரும் இளைஞர்களுக்கு மானியம், வங்கிக் கடன் - அமைச்சர் மனோ தங்கராஜ்!

தேனி மாவட்டத்தில் பால் உற்பத்தி, விற்பனை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ``தேனி மாவட்ட ஆவின் மூலம் கடந்த 10 மாதங்களில் 15,000 லிட்டர் பால் அதிகரித்துள்ளது. பால் கொள்முதலை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டிலும் புதிதாக கால்நடைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியாளர்களுக்கு வட்டியில்லா கடன்கள் மற்றும் மானியங்கள் அதிகரிக்கப்படும். தேனி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 500 இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து, சிறிய அளவிலான மாட்டுப் பண்ணை (மினி டெய்ரி) அமைப்பதற்கு வங்கிக்கடன் உதவி மற்றும் மானியங்கள் வழங்கி அவர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்ற இருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அந்தந்தக் கிராமத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களை அணுகலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த 3 ரூபாய் ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோல விவசாயிகள் இருப்பிடத்திலேயே பாலின் தரத்தை சோதனை செய்து அதற்கேற்ப மேலும் விலை அதிகரித்து வழங்கப்படும் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தவிர, மானியங்களுடன்கூடிய கால்நடை காப்பீடு 85 சதவிகித விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை 100 சதவிகிதமாக மாற்றுவதற்கு விவசாயிகள் முன் வந்து கால்நடை காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

பால் கறத்தல்

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 40 சதவிகிதம் உற்பத்தியாளர்கள் பயன்பாடு போக எஞ்சிய அளவு பால்தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் 36 லட்சம் லிட்டர் பால் மட்டும்தான் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.‌ மீதம் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் அரசே ஆவின் மூலம் கொள்முதல் செய்து அதை நமது மாநில பயன்பாடு போக எஞ்சியதை வெளி மாநிலத்துக்கு அனுப்ப முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.