Euro 2024: 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்; அதன் வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன?

யூரோ 2024 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது ஸ்பெயின்.

பெர்லினில் நடந்த ஃபைனலை 2-1 எனக் கைப்பற்றிய அந்த அணி நான்காவது முறையாக ஐரோப்பாவின் சாம்பியன் ஆகியிருக்கிறது. இந்தத் தொடரில் நடந்த 7 போட்டிகளையுமே வென்று அசத்தியிருக்கும் அந்த அணி, 15 கோல்கள் அடித்து அதிலும் சாதனை படைத்திருக்கிறது. இந்த மிகப்பெரிய தொடரில் ஈடு இணையற்ற செயல்பாட்டை அந்த அணி கொடுக்கக் காரணம் என்ன? அலசுவோம்.

Spains Alvaro Morata holds the trophy

ஸ்பெயின் அணியைப் பொறுத்தவரை அந்த அணி இத்தொடரை ஃபேவரைட்ஸாகத் தொடங்கவில்லை. அனைவருமே ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் ஆகிய அணிகளில் ஒன்றுதான் இப்பட்டத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்த்தார்கள். ஸ்பெயின் யாருடைய திட்டத்திலும் இருக்கவில்லை. ஆனால், ஓர் அணியாக அனைவரையும் விட திடமாக இருந்தது ஸ்பெயின்.

கடந்த 10 ஆண்டுகளாக பெரிய தொடர்களில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாத அந்த அணி, இப்போது புத்தம் புது பொலிவோடு களம் கண்டது. லூயிஸ் டி லா ஃபூன்டே பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு அந்த அணியின் ஸ்டைல் முற்றிலும் மாறியது. அவர்களின் ஆஸ்தான டிக்கி டாகா ஆட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது அந்த அணி. பால் பொசஷன் வைத்திருப்பதை இந்த அணியும் விரும்பியது. ஆனால், பந்து தங்கள் வசம் இருக்கும்போது விரைவிலேயே அட்டாக்கைத் தொடங்கினார்கள். சிலகாலமாக கால்பந்தில் பார்க்க முடியாத டைரக்ட் ஃபுட்பால் ஸ்டைலை டிக்கி டாகாவுடன் இணைத்து உருவாக்கினார் டி லா ஃபூன்டே. ஆனால், அதற்கு ஏற்ற அணியையும் அதி அற்புதமாகக் கட்டமைத்தார் அவர்.

Spains Mikel Oyarzabal, center, scores his sides second goal

எப்போதும் ஸ்பெயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நடுகளத்தில் மூன்று வித்தைக்காரர்களை செட் செய்தார். ரோட்ரி, ஃபேபியன் ரூயிஸ், பெட்ரி. மூவரும் ஒருவரையொருவர் சிறப்பாக compliment செய்யும் வீரர்கள். எப்போது அட்டாக்கில் இணையவேண்டும், எப்போது டிஃபன்ஸுக்குக் கைகொடுக்கவேண்டும், எப்போது பந்தைத் தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். செர்ஜியோ பொஸ்கட்ஸ் - ஜாவி - இனியஸ்டா போல் மெஜிஷியன்கள் நிறைந்த நடுகளம் இல்லையென்றாலும், இவர்கள் மூவருமே ஜீனியஸ்கள்தான். இந்த யூரோவின் பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் - ரோட்ரி. அந்தப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் ஃபேபியன். பெட்ரி காயமடைந்த பிறகு அவர் இடத்தில் ஆடிய டேனி ஓல்மோ, இந்தத் தொடரின் டாப் ஸ்கோரர் (3 கோல்கள்) என்பது இந்த நடுகளம் எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்த்தும்.

இந்த நடுகளத்தை விட ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது அவர்களின் அட்டாக். இரண்டு விங்கிலும் இரண்டு இளம் சூறாவளிகள் எதிரணிகளைப் பந்தாடின. இடது பக்கம் 22 வயது நிகோ வில்லியம்ஸ், வலது பக்கம் 16 வயது (ஃபைனலுக்கு முந்தைய நாள்தான் 17 ஆனது) லமீன் யமால். இருவரும் அனுபவ சூப்பர் ஸ்டார்கள் போல இந்த யூரோவில் அசத்தினார்கள். இவர்களது துடிப்பும், வேகமும் எதிரணி டிஃபண்டர்களை திக்குமுக்காடவைத்தது.

Spains Mikel Oyarzabal celebrates with Nico Williams, left, after scoring his sides second goal

வேகமாக பந்தோடு எதிரணியின் பாக்சுக்குள் நுழைவது, விங்கிலிருந்து உள்ளே வெளியே நகர்ந்து எதிரணியின் டிஃபன்ஸை குழப்புவது, கட் இன் செய்து பாக்சின் ஓரத்திலிருந்தே ஷாட்கள் எடுப்பது என முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் அவர்கள். வில்லியம்ஸ் 2 கோல்களும் 1 அசிஸ்ட்டும் பங்களிக்க, 1 கோல் அடித்ததோடு 4 அசிஸ்ட்கள் செய்தார் இளம் யமால். அவர்தான் இந்தத் தொடரின் சிறந்த இளம் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். பிரான்ஸுக்கு எதிரான காலிறுதியில் ஸ்பெயின் பின்தங்கியிருந்தபோது பாக்சுக்கு வெளியே இருந்து அவர் அடித்த அந்த அட்டகாச கர்லர் கோல் - இந்தத் தொடரின் மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாக அமைந்தது.

சரி, அந்த அணியின் அசத்தலான வீரர்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் ஸ்டார் வீரர்களால் வெற்றிகளை ஈட்டிட முடியுமா என்ன? அப்படியெனில் போர்ச்சுகலோ, பிரான்ஸோ, இங்கிலாந்தோ தானே கோப்பை வென்றிருக்கவேண்டும். ஸ்பெயின் இப்போது சாம்பியனாக இருக்க மிகமுக்கியக் காரணமே பயிற்சியாளர் டி லா ஃபூன்டேதான்.

மேலே பார்த்த 5 பொசிஷன்களுக்கும் அந்த அணிக்கு அட்டகாசமான வீரர்கள் அமைந்தார்கள். ஆனால், மற்ற இடங்களுக்கு? அதையெல்லாம் அலசினால் அந்த 63 வயது பயிற்சியாளரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் புரியும்.

Spains Dani Carvajal holds up the trophy to the fans

டிஃபன்ஸ் - ஸ்பெயினின் டிஃபன்ஸ் இந்தத் தொடரில் சிறப்பாக இருந்தது. 7 போட்டிகளில் அவர்கள் மொத்தம் நான்கு கோல்களே விட்டார்கள். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலகத்தர அணிகளோடு மோதும்போது கோல்கள் விடுவது சகஜம்தான். ஆனால் அதை கட்டுக்குள் வைத்தது ஸ்பெயினின் டிஃபன்ஸ். சொல்லப்போனால் அந்த டிஃபன்ஸ் நட்சத்திர வீரர்கள் நிறைந்தது என்றே சொல்ல முடியாது. ரைட்பேக் டேனி கர்வகால் மட்டுமே சூப்பர் ஸ்டார் பெயர். மற்ற இடங்களுக்கு அவர் வீரர்களைத் தேர்வு செய்த விதம் முக்கியமானது. சென்டர்பேக் பொசிஷனில் லி நொர்மாண்ட், லபோர்ட், நாசோ மூவரையும் ரொடேட் செய்தார் அவர்.

நாசோவுக்கோ 34 வயது, லபோர்ட் சவுதியில் ஆடிக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்கையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் போயிருந்தாலும் இவரை யாரும் கேள்விகள் கேட்டிருக்க முடியாது. ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. வயதையும், அவர்கள் ஆடும் கிளப்பையும் பற்றி யோசிக்கவில்லை. அவர்களால் அணிக்கு என்ன கொடுக்க முடியும் என்பது மட்டும்தான் அவர் நினைத்த விஷயம். வேகம் குறைவான குரேயேஷிய அணிக்கெதிராக நாசோவை ஸ்டார்ட் செய்த அவர், மற்ற போட்டிகளில் லபோர்ட்டைதான் ஆடவைத்தார். இப்படி ஒவ்வொரு யுக்தியையும் ரொம்பவே யோசித்து செய்தார்.

Englands Harry Kane applauds to supporters at the end of the final match

இவை அனைத்தையும் விட இவரை அதிகம் பாராட்டவேண்டியது லெஃப்ட் பேக் பொசிஷனில் மார்க் குகரெயாவைத் தேர்வு செய்ததற்குத்தான். சீசன் முழுக்க செல்சீ அணிக்காக விமர்சனங்களையே சந்தித்து வந்தவர், சீசன் முடியும்போதுதான் ஓரளவு நன்றாக ஆடினார். இருந்தாலும் ஒரு அட்டாகிங் கேம் ஆடும் ஸ்பெயின் அணியின் ஸ்டார்டிங் லெவனில் அவரை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. புண்டஸ்லிகாவில் அடித்து நொறுக்கிய அலெக்ஸ் கிரிமால்டோவே முதல் சாய்ஸாக இருப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சீசனில் 12 கோல்கள் அடித்ததோடு 17 அசிஸ்ட்கல் செய்தார் அவர். ஆம்! ஒரு அட்டாக்கருக்கான நம்பர்கள். அப்படிப்பட்ட ஒருவரை பெஞ்சில் வைக்க முடியுமா? வைத்தார் டி லா ஃபூன்டே.

காரணம் சிம்பிள்தான். கிரிமால்டோ லெஃப்ட் பேக் பொசிஷனில் ஆடிடவில்லை. அவர் ஆடியது லெஃப்ட் விங்பேக் பொசிஷனில். அங்கே அட்டாக்கில் அதிக வேலை இருக்கும். ஆனால் இங்கே டி லா ஃபூன்டேவுக்கு தேவை அட்டாக்கிங் நம்பர்கள் இல்லை. தன்னுடைய சிஸ்டத்துக்கு ஏற்ற, டிஃபன்ஸில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய ஒரு வீரர். அதனால் யாரும் எதிர்பார்க்காத குகுரெயாவை டிக் செய்தார். அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி அற்புதமாக செயல்பட்டார் அவர். இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் வின்னிங் கோலுக்கு அசிஸ்ட் செய்தது அவர்தான்!

Rodri - Player of the tournament

சரியான இடங்களுக்கு சரியான வீரர்களைத் தேர்வு செய்ததோடு, அதை கடைசி வரை தொடர்ந்தார் அவர். மற்ற பயிற்சியாளர்கள் போல் தொடர்ந்து மாற்றங்கள் செய்யவில்லை. சென்டர்பேக் பொசிஷனில் மட்டுமே அவராக மாற்றங்கள் செய்தார். மற்றபடி காயம், சஸ்பென்ஷன் காரணமாகவே மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு குரூப் சுற்று போட்டிகளுக்குப் பிறகே முதலிடம் உறுதியாகிவிட்டதால், மூன்றாவது போட்டியில் அனைத்து முன்னணி வீரர்களுக்கும் ஓய்வு கொடுத்தார். இதுவே அவர் செய்த மாற்றம். எந்தவொரு அணி சாம்பியன் ஆவதற்கும் நிலையானதொரு ஸ்டார்டிங் லெவன் முக்கியம். அதை கடைபிடித்தார் டி லா ஃபூன்டே.

ஆனால், அதுமட்டுமே அவர் சிறப்பல்ல. தேவையான நேரத்தில் சரியான மாற்றங்களை செய்து முடிவுகளை வசப்படுத்தினார் அவர். ஜெர்மனிக்கு எதிராக வின்னிங் கோல் அடித்த மெரினோவும், அதற்கு அசிஸ்ட் செய்த ஓல்மோவும் சப்ஸ்டிட்யூட்டாக வந்தவர்கள். ஃபைனலில் வின்னிங் கோல் அடித்த ஒயர்சபால் சப்ஸ்டிட்யூட். அதுவும் அந்த அணி முன்னணியில் இருக்கும்போதே அந்த மாற்றத்தை செய்திருந்தார் டி லா ஃபூன்டே. அவரது இந்த சமயோஜித திட்டங்கள் முற்றிலும் வேலை செய்தன!

Englands Declan Rice, top, jumps for the ball during the final match
இதையெல்லாம் விட, அவர் ஸ்பெயினின் அண்டர் 19, அண்டர் 21, அண்டர் 23 என அனைத்து அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு வீரருடனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதனால் வீரர்கள் பற்றிய அவரது புரிதல் சிறப்பாக இருக்கிறது. அவரது தேவை என்ன என்பது வீரர்களுக்கும் நன்கு புரிந்திருக்கிறது. அதுவும் ஸ்பெயின் அணிக்கு மிகப்பெரிய பாசிட்டிவ்.

இன்னொரு முக்கிய விஷயம், பயிற்சியாளரின் திட்டங்கள் சிறப்பாக இருந்தால் மட்டும் ஒரு அணி வென்றுவிடாது. களத்தில் முக்கிய தருணங்களில் வீரர்களும் ஜொலிக்கவேண்டும். ஸ்பெயின் வீரர்கள் அதைச் செய்தார்கள். தங்கள் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். ஓல்மோ, ஒயர்சபால், மெரினோ என மாற்று வீரர்களின் கோல்கள், குரேயேஷியாவுக்கு எதிராக் சிமோன் சேவ் செய்த பெனால்டி, ஃபைனலின் இறுதி நொடிகளில் கோல் லைன் சேவ் செய்த ஓல்மோ, குகரெயாவின் எழுச்சி என பல உதாரணங்களைச் சொல்லலாம்.

Spains Alvaro Morata holds the trophy after winning the final matc
இன்னும் சிம்பிளாகச் சொல்லவேண்டுமெனில் ஒவ்வொரு விஷயமும் கிளக் ஆன ஓர் அணியாக விளங்கியது ஸ்பெயின். அதனால்தான் எந்த அணியும் செய்யாத ஆதிக்கத்தைச் செலுத்தி, அனைத்து போட்டிகளையும் வென்று, யூரோவில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையும் படைத்து சாம்பியன் ஆகியிருக்கிறது அந்த அணி!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.