``பசுந்தாள் உர விதைகள் வழங்குவதில் குளறுபடி விகடன் வெளியிட்ட செய்தி; நடவடிக்கை எடுத்த அமைச்சர்!

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி அந்தந்த மாவட்ட வேளாண் வட்டார உதவி இயக்குநர்கள் இத்திட்டத்தில் பலனடைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இவை முறையாக வழங்கப்படுவதில்லை என்று திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் வேளாண் வட்டாரத்துக்கு உட்பட்ட தூசி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.நரசிம்மன் நம்மிடம் தெரிவித்திருந்தார்.

தக்கைப் பூண்டு

"சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர விதைகள் 1 கிலோ 100 அல்லது 110 ரூபாய்க்கு விக்குது. இந்த முற மானியத்துல 50 ரூபாய்க்கு கொடுக்கிறதா சொன்னாங்க. நான் போய் வெண்பாக்கம் வேளாண் வட்டார அலுவலர்கிட்ட கேட்டேன். அவர் இந்த வேளாண் வட்டாரத்துக்கு வரலைனு சொன்னார். திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கிட்ட இதுசம்பந்தமா கேக்கலாம்னு தொடர்பு கொண்டேன் போனை எடுக்கவே இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

`அருமையான திட்டம்தான்... ஆனா, அதிகாரிகள்தான் மானிய பசுந்தாள் உர விதைகள் வழங்குவதில் குளறுபடி... என்ற தலைப்பில் கடந்த 8-7-24 அன்று வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்று நம்மிடம் பேசிய விவசாயி நரசிம்மன், "பசுந்தாள் உர விதைகளை குறித்த நேரத்துல விதைச்சாதான், அது வளர்ந்த பிறகு மடக்கி உழுது நெல் நடவு செய்ய முடியும். ஜூலை மாசத்த விட்டா திரும்பவும் அக்டோபர், நவம்பர் மாசத்துலதான் கிடைக்கும். வெளியில வாங்குனா 1 கிலோ 110 ரூபாய்க்கு விக்குது. இப்போ மானியத்துல வாங்குனா 50 ரூபாய்தான். 1 ஏக்கருக்கு 20 கிலோனு 1000 ரூபாய்க்கு வேளாண் அலுவலகங்கள்ல கொடுக்குறாங்க. மானியத்துல வாங்குறதால 1,000 ரூபாய் மிச்சமாகுது. வெண்பாக்கத்துல கேட்டபோது இன்னும் வரலன்னு சொன்னாங்க.

சணப்பு

விகடன்ல செய்தி வெளியிட்ட மறுநாளே வெண்பாக்கம் வட்டார வேளாண் அலுவலர் ரேணுகாதேவி பேசினாங்க. சார்.. உங்களுக்கு காஞ்சிபுரம் வேளாண் அலுவலகத்துல விதை தயாரா இருக்கு. நீங்க போய் வாங்கிகோங்க. இப்போதான் வெண்பாக்கம் வட்டாரத்தையும் மானிய விதை திட்டத்துல இணைச்சிருக்காங்க. இனிமே திட்டம் அறிவிச்ச உடனே இந்த வேளாண் வட்டாரத்துலயும் விதைகள் கிடைக்கும். நீங்க இந்த விஷயத்தை வெளியில கொண்டு போனதால, வெண்பாக்கம் வேளாண் வட்டாரத்துக்கு நல்லது நடந்திருக்கு. திருவண்ணாமலை வேளாண் இணை இயக்குநர் இடமாற்றத்தில் சென்றுவிட்டதால் போனை எடுக்கவில்லைனு சொன்னாங்க.

நரசிம்மன்

நான் காஞ்சிபுரம் போய் 40 கிலோ விதைகளை வாங்கிட்டு வந்து ரெண்டு விவசாயிகள்கிட்ட பகிர்ந்துகிட்டேன்.

உழவு ஓட்டி விதைச்சிட்டேன். இப்போ முளைச்சிட்டு வருது. செய்தியை உடனே வெளியிட்டதோடு, அதை அமைச்சரின் கவனத்துக்குச் சென்றதால உடனடி நடவடிக்கை எடுத்திருக்காங்க. இது எனக்கு மட்டுமில்ல. இந்த வேளாண் வாட்டாரத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கும் நல்லது நடந்திருக்கு. விகடனுக்கும் அமைச்சருக்கும் நன்றி" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.