12 வயது சிறுவனை ரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து தாக்கிய கும்பல்; பீகாரில் அதிர்ச்சி! - என்ன நடந்தது?
பீகாரில் 12 வயது சிறுவனை மூன்று பேர் ரயில்வே தண்டவாளத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவத்தில், ரயில் வருவதற்குள் போலீஸார் தக்க சமயத்தில் வந்து சிறுவனைக் காப்பாற்றியிருக்கின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, தலைநகர் பாட்னாவிலிருந்து 125 கி.மீ தொலைவிலுள்ள `பீகாரின் லெனின்கிராட் என்றழைக்கப்படும் பெகுசராய் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவன், ஒரு கடையில் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர், மூன்று பேர் அந்த சிறுவனை லக்மினியா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்துக்கு அழைத்துச் சென்று, அதில் கட்டிவைத்து தடியால் கடுமையாகத் தாக்கி சிறுவனை அப்படியே விட்டுச் சென்றனர்.
பின்னர், இதுபற்றி தகவலறிந்த போலீஸார், அந்த தண்டவாளத்தில் ரயில் எதுவும் வருவதற்கு முன்பாக உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுவனைத் தாக்கியவர்கள் யார் என்பதை அவரின் தந்தை சொல்ல மறுத்துவிட்டார். இருப்பினும், சிறுவன் அடையாளம் தெரிவிக்க அடுத்த சில மணிநேரங்களில் ரோஷன் குமார், ஜெய் ஜெய் ராம் சவுத்ரி, கஹுல் குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இது குறித்து பேசிய போலீஸ் துணை கண்காணிப்பாளர் நேஹா குமார், `` திருடியதாக சந்தகத்தின் பேரில் ஒரு சிறுவனை ரயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து மூன்று பேர் தாக்கியதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனை மீட்டனர். சிறுவனைத் தாக்கியவர்கள் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


