`சாட்சியங்கள் நம்பும்படி இல்லை - 9 வருட பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த நீதிமன்றம்
ஒன்பது வருட பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்கள் நம்பும்படியாக இல்லை என டெல்லி நீதிமன்றம் அவரை விடுத்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் மகேந்தர். சப்ஜி மண்டி காவல் நிலையத்தில் இவர்மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை மகேந்தர் கடந்த 2014-ல் நைனிடாலுக்கு அழைத்துச் சென்று, உணவில் மயக்கமருந்து கலந்துகொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் டெல்லி திரும்பிய பிறகு மகேந்தர் அந்த வீடியோவை வெளிவிடப்போவதாக மிரட்டி, ஒரு கட்டுமான தளத்தில் பலமுறை அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த வழக்கில் திஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி பிரியங்கா பகத் முன்னிலையில் நடைபெற்றுவரும் விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் மேற்குறிப்பிட்டவற்றைத் தனது வாதமாக முன்வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சாட்சியங்கள் இதில் நம்பகமானதாக இல்லை என மகேந்தரை நீதிமன்றம் விடுத்திருக்கிறது.
ஜூலை 9 தேதியிடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பில், `அரசுத் தரப்பு சாட்சி 12 அல்லது பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்கள் தெளிவாக இல்லை. மேலும், இது நம்பகமானவை என்று பிற ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்த வழக்கை நியாயமான சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட மகேந்தர் விடுவிக்கப்படுகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரன் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பதுதான் அரசுத் தரப்பின் முழு வாதமாக இருக்கிறது. ஆனால், அந்த வீடியோவை அரசு தரப்பு ஆதாரமாகக் கொண்டுவரவில்லை. அதேசமயம், மற்ற நபர்கள் பணிபுரியும் ஒரு கட்டடத்தில் அவர் (பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் கூறுவது சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாமல், அந்தப் பெண் அங்கு பணிபுரிபவர்களிடமோ அல்லது உடனடியாக போலீஸிலோ ஏன் புகார் செய்யவில்லை என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. சாட்சிகளின் வாக்குமூலங்களில் காணப்படும் முரண்பாடுகள் இந்த வழக்கின்மீது கடுமையான சந்தேகங்களை உருவாக்குகின்றன" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


