அரிசி, பருப்பு முதல் வேஷ்டி வரை... உங்கள் சாய்ஸ் பிராண்டா, அன்பிராண்டா? எதில் என்ன பிளஸ், மைனஸ்?

வாழ்க்கையில் நாம் சந்தித்த எத்தனையோ மாற்றங்களில் ஒன்று, நாம் ஷாப்பிங் செய்யும் விதம். நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு நான் சொல்வது புரியும். தொண்ணூறுகள் வரை எண்ணெய் வாங்க மளிகைக் கடைக்கு பழைய காலி பாட்டிலை எடுத்துக்கொண்டுச் சென்றோம். அடுக்கப்பட்டிருக்கும் டின்களிலிருந்து நாம் கேட்ட எண்ணெயை நீண்ட கொக்கிக் கரண்டி கொண்டு நம் பாட்டிலில் ஊற்றித் தருவார்கள்.

shopping

அரிசி, பருப்பு, உப்பு வகையறாக்கள் வாங்க நல்லவேளையாக பாத்திரம் எடுத்துச் செல்ல வேண்டாம். பெரிய மனசு பண்ணி நமக்கு எத்தனை வேண்டுமோ அதை சனல் கயிறால் கட்டி ஒலிம்பிக் டார்ச் போல் தருவார்கள். அதைத் தூக்கிப் பிடித்து வீட்டிற்கு ஒடி வந்தோம்.

வாங்கிய பொருள்கள் பெரும்பாலும் இப்படியே. எதற்கும் பெயர், லோகோ இருக்காது. போட்டுக்கொண்ட சட்டை பேண்ட் முதல் கட்டிக்கொண்ட வேஷ்டி வரை சப்ஜாடாக இப்படித்தான்.

பொருள்களுக்கு பெயர் இல்லாத அந்த கமாடிட்டி யுகம் காலாவதியாகி வருகிறது. இது பிராண்ட் உலகம். எல்லா பொருள்களுக்கும் ஏதோ ஸ்கூல் சேர்க்கும் அவசரம் போல் பெயர் சூட்டி, லோகோ வைத்து, பேக்கிங் செய்து விற்கும் காலம். ‘ஆஷீர்வாத், ‘பேராசூட்’, ’பில்ஸ்பரி’, ’லூயி ஃபிலிப்’, ‘பாரத் மேட்ரிமனி’ என்று ஒவ்வொரு பொருள் பிரிவிலும் ஏகத்துக்கு பிராண்ட்ஸ். புயலுக்கே ’வர்தா’, ‘நிலம்’ என்று பெயர் வைக்கும் நாம் விற்கும் பொருள்களை விட்டு வைப்போமா!

பெயரிடாமல் பொருளை பொருளாகக் கேட்டு வாங்கும் சமாச்சாரத்தை கமாடிட்டி என்கிறார்கள். ‘அரை கிலோ கோதுமை’ என்று பொத்தாம் பொதுவாக கேட்டு வாங்குவது. ஆனால், அரை கிலோ ஆசீர்வாத்தை நாமே கடையில் தேடி எடுப்பது பிராண்ட்.

இன்று மார்க்கெட்டில் மையம் கொண்டு கடைகளின் கரையை கடக்கிறது இந்த பிராண்ட் புயல். கமாடிட்டி காலம் கரைந்து வருகிறது. பொருள் வாங்கச் சிறந்தது கமாடிட்டியா, பிராண்டா...? பட்டிமன்ற டாபிக் போல இதை நீண்ட நேரம் விவாதிக்கலாம்!

ஒரு பொருளை கமாடிட்டியாக வாங்கும்போது அதன் ஆதாரப் பயனுக்கு மட்டுமே வாங்குகிறோம். பொருளாதாரத் தத்துவப்படி, இதை ‘basic utility’ என்பார்கள். சாம்பார் சமைக்கத் துவரம் பருப்பு வேண்டும். கடையில் பெயர் இல்லாத பாக்கெட்டில் அல்லது பேப்பரில் கட்டித் தந்தால் போதுமானது. பிராண்டட் துவரம் பருப்பு இருந்தால்தான் சாம்பார் ஆவேன் என்று அது அடம் பிடிப்பதில்லை.

பிராண்ட் நேம், லோகோ, பேக்கிங், விளம்பரம் என்று எந்த அடப்பமும் இல்லாததால், துவரம் பருப்பு விலை சவரன் ரேஞ்சுக்கு சந்தி சிரிப்பதில்லை. இதே கதைதான் கமாடிட்டியாக விற்கும் பல பொருள்களிலும்.

brand banner

கமாடிட்டியாக வாங்கும்போது பொருள்களின் விலை குறைவு. இன்று பாங்க் லோன் வாங்கித்தான் பால் பாக்கெட்டே வாங்கவேண்டியிருகிறது என்று பலர் புலம்பும் காரணம் இதுவே. ‘அப்போ சிப்ஸ் வாங்கினா பாக்கெட் நிரம்ப இருக்கும். இன்னைக்கு காசு கொடுத்து காத்து பாக்கெட்ட வாங்க வேண்டியிருக்கு’ என்று கம்ப்ளெயின் செய்பவர்கள் வயிற்றெச்சல் இதனாலேயே. ஆக, கமாடிட்டியாக வாங்குவதுதான் புத்திசாலித்தனம்… என்று அவசரப்பட்டு தீர்ப்பு எழுதுவதற்குள் பிராண்ட் பக்க நியாயத்தை கேட்பதுதான் நியாயம்.

அதே சாம்பார், துவரம் பருப்பை எடுத்துக்கொள்வோம். கமாடிட்டியாக வாங்கியபோது அது அப்படி ஒன்றும் அமர்கள சுத்தமாக எல்லாம் இருக்காது. தூசி இருக்கும். துரும்பு இருக்கும். வாங்கியது துவரம் பருப்பா. தூசி பருப்பா என்றே சந்தேகம் வரும். சமயத்தில் புழு இருக்கும். உங்களுக்கு அஷ்டமத்தில் சனி இருந்தால் பாம்புகூட இருக்கும். பார்த்து பக்குவமாகப் பிரித்தெடுத்து சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து மிச்சம் மீதி கொண்டு சாம்பார் சமைக்கவேண்டும்.

Shopping

ஆனால், இதையே பிராண்டாக வாங்கும்போது தூசி முதல் துரும்பு வரை, புழு முதல் பாம்பு வரை அனைத்தையும் சுத்தம் செய்து பாக்கெட்டில் பதவிசாக கம்பெனியே கட்டித் தருவார்கள். அப்படி ஒருவேளை, இம்சைகள் இருந்து தொலைத்தால் ‘போடா போக்கத்தவனே’ என்று அடுத்த கம்பெனி பிராண்டை வாங்கலாம். வாங்கலாம் என்ன வாங்கலாம். வாங்குகிறோம்!

போதாக்குறைக்கு ஃபேஸ்புக் முதல் இன்ஸ்டாக்ராம் வரை வாங்கிய பிராண்டின் ஃபோட்டோ போட்டு அதன் குறைகளை அம்புகுறி இட்டு படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட்டு ஊர் அறிய நம் கோபத்தை ஊற்றித் தீர்க்கலாம். கமாடிட்டியாக வாங்கினால் இந்த பஜனை கிடையாது. என்ன எழுதியிருக்கோ அப்படித்தான் நடக்கும் என்று நம் தலையெழுத்தை நொந்துகொள்ள வேண்டியதுதான்!

பிராண்டட் பேக்கிங் அரை கிலோ எனில், சொன்னபடி அரை கிலோ இருக்கும். சற்று குறைந்தாலும் கம்பெனியை கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு இழுக்கலாம். சாம்பார் குறைச்சல், அதனால் எனக்கு மனஉளைச்சல் என்று கேஸ் போட்டு கம்பெனியை சேர்ந்து சமைக்கலாம். பட்ட கஷ்டத்துக்கு இஷ்டத்துக்கு நஷ்ட ஈடு கேட்கலாம்!

பலசரக்குக் கடை

கமாடிட்டியாய் துணி வாங்கி டெய்லரிடம் அவர் சௌகரியத்துக்கு சட்டை பேண்ட் தைத்துக்கொண்ட காலம் ஒன்று உண்டு. யானை கால் வந்தது மாதிரி பேண்டை பேந்தபேந்த தைத்தாலும் கடனே என்று போடவேண்டியதுதான். முழுக்கை சட்டை ஒரு முறை தோய்த்தால் அரைக்கை ரேஞ்சுக்கு சுருங்கும். சாயம் வெளுத்து உள்ளே போட்டிருக்கும் பனியன் தெரியும். இது என்ன கன்றாவி என்று பார்த்து துக்கம் விசாரிப்பவர்களிடம் ‘இப்ப இது தான் ஃபேஷன்’ என்று புளுகவேண்டியிருக்கும்.

அந்த கமாடிட்டி கஷ்ட காலம் இப்போது இல்லை. பிராண்டட் துணி வாங்கி அது கர்சீப் ரேஞ்சுக்கு சுருங்கினாலோ, பேண்ட் பெப்பரப்பே என்று விரிந்தாலோ வாங்கிய கடையிலேயே தூக்கி எறியலாம். மாற்றிக்கொடு என்று மிரட்டலாம். அவர்களும் ஒழுங்கு மரியாதையாக மாற்றித் தருவார்கள். நல்ல காலம், மேட்ரிமனி வெப்சைட்டுகளில் இது போல் சரியில்லாத சமாசாரத்தை மாற்றித் தருவதில்லை!

கமாடிட்டியாக விற்ற காலத்தில் பொறாமை இருந்ததோ இல்லையோ போட்டி இல்லை. கிடைத்த பொருளை அவர்கள் சொன்ன விலையில் எடுக்கவேண்டிய தலையெழுத்து மட்டுமே நமக்கு. ஆனால், இன்று பிராண்ட் யுகம். ஒவ்வொரு பொருள் பிரிவிலும் நூற்றுக்கணக்கான பிராண்டுகள். ’என்னை பார்’, ‘இதை வாங்கு’ என்று மார்க்கெட் என்பதே சாமான்களின் சுயம்வரம் என்றாகிவிட்டது. பர்ஸை எடுத்துக்கொண்டு பர்சேஸ் செய்யச் சென்றால் பிராண்ட் கன்னிகள் கழுத்தை நீட்டி க்யூ கட்டி நிற்கிறார்கள். ‘ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ’ என்கிறாள் ஒருத்தி. ‘50% அதிகம்’ என்கிறாள் இன்னொருத்தி. ‘அவள் கிடக்கிறா, என்னை வாங்கினால் பத்து ரூபாய் தள்ளுபடி’ என்கிறாள் மற்றொருத்தி.

கட்டுரையாளர்: Sathis Krishnamurthy

சர்வம் பிராண்ட மயம். சாமான்களை விடுங்கள். தெரு நாய்க்குப் பழையதை போட்டு அது நாம் போகும்போது வரும்போது நன்றியோடு வாலாட்டிய காலம் வழக்கொழிந்து போய்விட்டது. அந்த தெரு நாய்கள்கூட கமாடிட்டியாகிவிட்டன. இன்று காசு கொடுத்து ப்ரீடட் நாய்கள் வாங்கும் காலம். லேபரடார் பிராண்ட் நாய்களைவிட ஜெர்மன் ஷெப்பர்ட் பிராண்ட் நாய் விலை அதிகம். உங்கள் வசதிக்கேற்பவும், காட்ட விரும்பும் பந்தாவிற்கேற்பவும் நாய்கள் உண்டு. பிராண்டட் நாய் விற்ற காசும் குறைக்காதாம்!

இன்றைக்கு கமாடிட்டி உலகில் விற்பவரே ராஜா. ஆனால், போட்டி நிறைந்த இன்றைய பிராண்ட் உலகில் கஸ்டமர்தான் கிங். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். இங்கு பிராண்ட் கூத்தாடிகள் இரண்டு பட்டு கிடக்கிறார்கள். எனவே, ஊருக்குக் கொண்டாட்டம்! பிறகென்ன, அனுபவிக்க வேண்டியதுதானே...!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.