சென்னை கனமழை; பள்ளத்தில் சிக்கிய டூவீலர்... அண்ணன் கண் முன்னே பறிபோன தங்கை உயிர்!

சென்னை ஐ.சி.எஃப், டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குப்பன். இவரின் மனைவி தயாம்மாள். இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற மகனும் ஹேமமாலினி என்ற மகளும் உள்ளனர். வெங்கடேஷ், ஹேமமாலினி ஆகியோர் டிகிரி படித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அம்பத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் செல்ல ஹேமமாலினி தன்னுடைய அண்ணன் வெங்கடேஷ் பைக்கில் நேற்று முன்தினம் சென்றார். பின்னர் இருவரும் வீடு திரும்பியபோது கனமழை பெய்தது. அதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சாலை கும்மிருட்டாக காட்சியளித்தது.

மனித சடலம்

திருமங்கலம் 100 அடி சாலை அண்ணாநகர் 18-வது பிரதான சாலை சந்திப்பு பகுதியில் வெங்கடேஷும் ஹேமமாலினியும் பைக்கில் வந்தனர். அப்போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வெங்கடேஷ் ஓட்டி வந்த பைக் ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில் நிலை தடுமாறி வெங்கடேஷும் ஹேமமாலினியும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று ஹேமமாலினியின் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். உடனடியாக வெங்கடேஷ், தன்னுடைய தங்கையை காப்பாற்ற அவ்வழியாக சென்றவர்களிடம் உதவி கேட்டார். ஆனால் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் மழையால் ஆம்புலன்ஸ் வர காலதாமதமானது. அதனால் அணண்ன் கண் முன்னே தங்கை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து ஹேமமாலினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹேமமாலியின் உயிரிழப்புக்கு சாலையிலிருந்த பள்ளமே காரணம் என்று குற்றம்சாட்டும் அவரின் குடும்பத்தினர், அடுத்த உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு அதை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து உடனடியாக அந்தப் பள்ளம் இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களால் சரி செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.