விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை... 2,800 கோடியில் உருவாகும் டிஜிட்டல் வேளாண் திட்டம்..!

3-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல் 100 நாள்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் ஒன்றாக, ரூ.2800 கோடி டிஜிட்டல் வேளாண் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம் என்பது நாடு தழுவிய விவசாயிகளின் பதிவேடு, பயிர் விதைப்புப் பதிவேடு மற்றும் கிராம வரைபடங்களின் புவிசார் குறிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இதற்கான முன்மொழிவுக்கு விரைவில் ஒப்புதல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

கோவிட் தொற்றால் தாமதம்

இந்த திட்டப்பணிகளுக்காக ரூ.2,800 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் (2025-26 வரை) இது செயல்படுத்தப்படும். டிஜிட்டல் வேளாண் திட்டத்தின் ஒருபகுதியாக, ஜூலை 2024 முதல் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். சாகுபடி வயல் அளவில் பயிர்களின் பரப்பளவு கணக்கீடு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டிருந்தது மத்திய அரசு.

டிஜிட்டல் வேளாண் திட்டத்தில் விருதுநகர்!

இந்த முன்னோடித் திட்டமானது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத், மகாராஷ்டிராவில் பீட், குஜராத்தில் காந்தி நகர், பஞ்சாபில் ஃபதேகர் சாஹிப் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வேளாண் திட்டத்தில், விவசாயிகளின் பதிவேடு உருவாக்கப்படும். அதில் ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒரு விவசாயி தனது நிலத்தில் விதைத்த பயிர்களின் பதிவேடு இருக்கும்பட்சத்தில், அது சிறந்த திட்டமிடல் மற்றும் பயிர் உற்பத்தியை மதிப்பிடுவதற்கு உதவும்.

விவசாய நிலம்

விவசாயக்கடன், காப்பீடு பெற உதவும்

ஒருசில மாநிலங்களில், விவசாயிகளுக்கென தனிப்பட்ட அடையாள அட்டை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், விவசாயிகளுக்கான அடையாள அட்டையை உருவாக்கத் தொடங்கிவிட்டன. ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு ஏற்கனவே, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டைகளை தயாரித்துள்ளது.

தனித்துவமான விவசாய அடையாளம் என்பது, புதிய மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை தொடங்க அனுமதிக்கும் மற்றும் விவசாயிகள் தங்களது அடையாள அட்டை மூலம் பிரதம மந்திரி கிஷான் திட்டம், ஃபசல் பீமா யோஜனா உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களைப் பெற முடியும். விவசாயக் கடன்கள் மற்றும் காப்பீடு போன்ற நிதிச் சேவைகளை விவசாயிகள் பெறுவதற்கும் இது உதவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.