ஸ்ரீவில்லிபுத்தூர்: நிலத்தை சர்வே செய்ய சென்ற அதிகாரிகள்; அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்த நபர்கள்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நில அளவைக்காக சென்ற சர்வேயர்களுக்கு அரிவாளை காண்பித்து கொலைமிரட்டல் விடுத்த வீடியோ, வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து வருவாய்துறையினரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர்கள் தங்கபாண்டியன்-சுப்புலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதியினருக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி தங்கபாண்டியன் வருவாய்த்துறை அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்தமனு மீது விசாரணை செய்த அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அதன்படி, நிலத்தை அளவீடு செய்ய வட்ட துணை அளவயர் மற்றும் வட்ட சார் அளவயர் ஆகியோர் சென்றுள்ளனர். தொடர்ந்து, நிலத்தை அளந்து கொண்டிருக்கும்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளர்களான ராசைய்யா மற்றும் அவரின் உறவினர் மகன் ராஜபிரபு ஆகியோர், நில அளவீடு செய்ய வந்த அளவையர்களிடம் தகராறு செய்துள்ளனர். எங்களுக்கு தகவல் சொல்லாமல், எங்களின் அனுமதி இல்லாமல் எங்களுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இடத்தை ஏன் அளக்க வந்தீர்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதில் சொல்லும்போதே.. தகராறில் ஈடுபட்ட இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சர்வேயர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ விருதுநகர் மாவட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக சர்வேயர்கள் இருவரும், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாரிடம் புகார் அளித்த நிலையில், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து உயரதிகாரிகளின் அனுமதி பெற்று, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். கொலைமிரட்டல் விடுத்த நபரில், ராஜபிரபு என்பவர் வனத்துறையில் வேலைபார்த்து வருவதாகவும், வனத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


