நஷ்டம் இல்லாமல் விவசாயம் செய்வது எப்படி? விருது பெற்ற விவசாயியின் வெற்றிக்கதை!

பெரிய அளவில் நிலம் இந்தால்தான் வருமானம் எடுக்க முடியும் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் குறைந்த இடத்தில் நஷ்டம் இல்லாமல் பலவகையான பயிர்களை சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி டெபோஜித் சாங்மாய். சிறிய நிலப்பரப்பில் பெரிய சாதனையை அவரால் எப்படி படைக்க முடிந்தது? என்ற கேள்விக்கு விடையாக அவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

அஸ்ஸாமின் தேமாஜி மாவட்டத்தின் அழகிய மோதடாங் பகுதியில் வசிக்கிறார் டெபோஜித் சாங்மாய். விவசாயத்துக்காக இந்திய அரசின் பண்டிட் தீன்தயாள் அந்த்யோதயா கிரிஷி புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.

அசாம் விவசாயி டெபோஜித் சாங்மா

புதுமை உத்திகளால் புரட்சி!

சாங்மாய்க்கு 1 ஏக்கர் 87 சென்ட் (3 பிகா) நிலம் உள்ளது. இதை ஒரு பண்ணையாக உருவாக்கியுள்ளார். இதில் 5 பசுமைக் குடில்கள், ஒரு பயிற்சி மையம், ஒரு குளம் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான இல்லம் உள்ளது. வருமானம் கொடுக்கும் பண்ணையாக மட்டுமில்லாமல் பயிற்சி களமாகவும் தன்னுடைய பண்ணை இருக்க வேண்டும் என்ற வகையில் ஒவ்வொரு கூறுகளையும் திட்டமிட்டு, மிகவும் கவனமாக செய்து வருகிறார் சாங்மாய்.

சாங்மாயின் தனிச்சிறப்பு என்னவென்றால் மற்ற விவசாயிகள் தக்காளியை 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்கும்போது, ​இவர் கிலோ 40-80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்றால், பருவ மழை காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியை நிறுத்திவிடுவார்கள். ஆனால், இவர், இதுதான் சரியான வாய்ப்பு என்று தக்காளியை பருவமழை காலங்களில் சாகுபடி செய்யும் யுக்தியை கையாள்கிறார். சந்தையில், தக்காளியின் தேவை உச்சத்தில் இருக்கும்போது தக்காளியை தடையின்றி சீராக வழங்கி, அதற்குரிய வருமானத்தை ஈட்டுகிறார்.

பசுமை இல்லங்கள் என்ற சொர்க்கம்!

சாங்காயின் பண்ணையில் உள்ள முக்கிய அம்சம், அங்குள்ள பசுமை குடில்களாகும். இவை, பயிர்களுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். அதாவது அதிக வெப்பநிலை, பூச்சித் தாக்குலை தவிர்க்க பசுமைக் குடில்கள் உதவுகின்றன. இரண்டு பசுமைக் குடில்களில் தற்போது கத்திரிக்காய், விதைக்கான மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார். மற்ற இரண்டு பசுமை குடில்கள், நாற்று உற்பத்திக்கென்று பயன்படுத்தப்படுகின்றன.

சாங்மாய்க்கு கணிசமாக வருமானம் தரும் மற்றொரு அம்சம், விதை நெல் உற்பத்தியாகும். வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கும் ரகங்கள், உயர் ரக நெல் விதைகளை பயிரிட்டு வருகிறார். தரமான விதைகளை உற்பத்தி செய்து வருவதால், இவருக்கு விதைகளுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை அப்படியே விற்பதைவிட விதைக்காக விற்கும்போது கூடுதல் வருமானம் பார்த்து வருகிறார். மேலும், வடகிழக்கு பிராந்தியத்தில் ஒரு முன்னணி விவசாய கண்டுபிடிப்பாளர் என்ற பெயரும் கிடைத்துள்ளது.

செழிப்பான பண்ணை

விவசாயி சாங்மாய் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் அனுபவம், உழைப்பு, அவருடைய பண்ணையோடு நின்றுவிடவில்லை. தனது அனுபவங்களை, மற்ற விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறார். பப்பாளி, மிளகாய், எலுமிச்சை போன்ற பலதரப்பட்ட நாற்றுகளை உற்பத்தி செய்கிறார். இதை எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்று மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டி வருகிறார். புதிய விவசாய உத்திகள், உரம், நீர் பாசனம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

ஒருங்கிணைந்த முறைகளை பின்பற்றுங்க

டெபோஜித் சாங்மாய், தனது விவசாய அனுபவம் பற்றி கூறுகையில், "விவசாயத்தில் வெற்றிபெற, விவசாயிகள் ஒருங்கிணைந்த முறைகளை பின்பற்ற வேண்டும். இந்த அணுகுமுறை, ஒரே பண்ணையில் பல பயிர்கள் பயிரிடுவது மற்றும் கால்நடைகளை வளர்ப்பதை உள்ளடக்கியது.

பயிர் சாகுபடி பொய்த்துப்போகும் சமயங்களில் பெரும் அபாயங்களை இதன்மூலம் குறைக்கலாம். உதாரணமாக, ஒரு பயிரில் விளைச்சல் குறைந்தால், மற்றொரு பயிர் மூலம் இழப்பை ஈடுகட்டலாம். பப்பாளி விளைச்சல் கைகொடுக்காதபோது, கத்திரிக்காய் ஓரளவுக்கு வருமானம் தரும்; கத்திரிக்காய் விளைச்சல் குறைந்தால் கொத்தமல்லி கை கொடுக்கும். விவசாயத்தில் வெற்றி பெற, சந்தையின் தேவையை அறிந்து பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.

பண்ணையில் டெபோஜித் சாங்மாய்

பயிரை புரிந்து கொள்ளுங்கள்!

விவசாயம் என்பது ஒரு விஞ்ஞானம். எந்தவொரு பயிர் சாகுபடியையும் தொடங்குவதற்கு முன், விவசாயிகள் தாங்கள் வளர்க்கத் திட்டமிடும் பயிரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வேளாண் அறிவியல் மையங்களில் உள்ள விஞ்ஞானிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அனுபவ விவசாயிகளிடமிருந்து சில வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.