குழந்தை வளர்ப்பு: அப்பாக்கள் ஏன் ஒதுங்கிக்கொள்கிறார்கள்? அவளின் சிறகு

பரபரப்பான ஹோட்டல் அது. சாப்பிட  இடம் தேடிக்கொண்டிருந்தேன். கொஞ்சம்கூட கவனம் இல்ல... பிள்ளைய என்னத்த பார்த்துக்குற, தண்ணீ பாட்டில் எடுத்துட்டு வரணும்னு தெரியாதா என ஓர் ஆண் தன் மனைவியை கடிந்து கொண்டிருந்தார். தலைகுனிந்து நின்றவள் நிமிர்ந்த போதுதான் தான் தெரிந்தது என்னுடன் கல்லூரியில் படித்த பிரியா  என்பது.  துப்பட்டாவிற்கு மேல் ஒரு துண்டு, ஒரு கையில் ஹேண்ட் பேக், இன்னொரு கையில் குழந்தை என நின்றுகொண்டிருந்தாள். அவளின் கணவர் ,போகலாம் என்றதும்,  குழந்தையின் மூக்கை, துண்டில் துடைத்துக்கொண்டாள். அவர் முன்னே நடந்து செல்ல இவளோ, குழந்தை, பை, துண்டு, ஹேண்ட் பேக் என எல்லாவற்றையும் சுமந்துகொண்டே ஓடினாள். ஆறடி வளர்ந்திருக்கும் அவளின் கணவருக்கு குழந்தையை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லையா..? குறைந்தபட்சம் அவளின் கையில் இருந்த பொருள்களையாவது வாங்கியிருக்கலாமே என தோன்றியது.

மாதிரிப்படம்

அழுக்குப்படிந்த அவளின் சுடிதாரும், அவள் கணவரின் வசைகளையும் பார்த்தபோது, ஓஹோ என வாழ்ந்து கெட்டவர்களைப் பார்க்கும்போது வரும் சோகம் நெஞ்சை அப்பியது. கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுப்பவள் பிரியா. நடனம், பேச்சுப்போட்டி என எல்லா இடங்களிலும் அவள் பெயர் இருக்கும். போட்டிகளுக்குச் சென்று பரிசு வாங்காமல் அவள் வந்ததே இல்லை. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்குச் செல்லவேண்டும் என்பது அவளின் கனவு. அவள் நினைத்ததுபோலவே கல்லூரி மூன்றாமாண்டில் 25,000 ரூபாய் சம்பளத்தில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. பொண்ணுனா அந்த மாதிரி இருக்கணும். படிச்சுது, வேலைக்குப் போயிருச்சு என, என் அப்பாவிடம் நான் திட்டு வாங்காத நாள்களே இல்லை. நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் விட்டு, இல்லாத ஒரு குணத்தை நண்பர்களுடன் நம் பெற்றோர் ஒப்பிடும்  அத்தியாத்தை நாம் எல்லோரும் கடந்திருப்பது இயல்புதான். நானும் அந்த வசைகளை அப்படித்தான் கடந்தேன். ஆனால், வேலைக்குப் போக வேண்டும் என்பதை என் மனதில் விதைத்தவள் அவள்.  இன்று வேலையை பற்றியெல்லாம் யோசிக்காமல் குழந்தைக்காக வாழத்தொடங்கியிருக்கிறாள் ...

இப்படி குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விட்ட எத்தனை ஆண்களை இந்தச் சமூகத்தில் நம்மால் பார்க்க முடியும். எத்தனை கணவர்கள் குழந்தையை வளர்க்க, கவனித்துக்கொள்ள தங்கள் அலுவலக நேரத்தை தியாகம் செய்யத்  தயாராக இருப்பார்கள்..? எத்தனை ஆண்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத ஏதோ ஒரு நாளில் விடுமுறை எடுத்து குழந்தையை கவனித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்? நூற்றில் ஒரு சிலரை வேண்டுமானால் கை காட்டாலாம். வயிற்றில் இருந்து வெளியே வந்தாலும் குழந்தை வளர்ப்பை தன் தோளிலும், முதுகிலும் பெண்கள்தான் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதை கண்ணுக்குத் தெரியாத சட்டம் ஆக்கி அழகுபார்க்கிறது சமூகம். குழந்தையைத் தூக்கும்போது எத்தனை பெண்கள் தங்கள் கனவுகளை இறக்கி வைக்கிறார்கள் என்பது இந்தச் சமூகத்திற்கு புரிவதே இல்லை. பெரும்பாலான ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது பொருளாதார ரீதியாகவே இருக்கிறது. ஃபீஸ் கட்டியாச்சு, கேட்டதை வாங்கிக் கொடுத்தாச்சு, இன்னும் என்ன குழந்தை வளர்ப்பில் என் பங்கு இருக்கிறது என சத்தமாக தன் உரிமைக்காக  நிற்கும் ஆண்கள் அதிகம். ஆனால், குழந்தை வளர்ப்பு என்பது மூக்கு சிந்துவதில் தொடங்கி, பள்ளி, கல்லூரி என அடுத்தடுத்து முன்னேற்றம் வரை நிழலாய் நிற்பது. குழந்தைகளை மனதால் வளரச்செய்வது. பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை பரிசு, பாராட்டு வாங்கி வரும் சூழலில் குடும்பமே குழந்தையை என் குழந்தை என கொண்டாடும். அதே குழந்தை தவறு செய்தால் அவங்க அம்மா வளர்ப்பு என ஒதுங்கிக்கொள்வார்கள். இப்படித்தான் சத்தமே இல்லாமல் குழந்தை வளர்ப்பை அம்மாவின் பொறுப்பாக்கியிருக்கிறது சமூகம்.

வேலையைத் தொடர்ந்துகொண்டு குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்கள் இன்னும் பரிதாபத்திற்குரியவர்கள். என் அலுவலகத்தில் பணிபுரியும் திவ்யாவின் முகத்தில் மாலை 5 மணிக்கெல்லாம் பரபரப்பு அப்பிக்கொள்ளும். தண்ணீர் பாட்டிலை நிரப்புவது, பையை சரி செய்வது, ரெஸ்ட் ரூம் சென்று வருவது என பரபரப்பாக இருப்பாள். நிமிடத்திற்கு ஒரு முறை அவளின் கண், கடிகாரத்தைப் பார்த்துக்கொள்ளும். மாலை 5 மணிக்கு மேல் புதிதாக எந்த வேலையும் தன்னை நெருங்காமல் பார்த்துக்கொள்வாள். சரியாக ஆறு மணிக்கு திவ்யாவின் கைகள் சிஸ்டத்தை ஆஃப் செய்துவிடும். கிழிந்து போன அந்த ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு சிட்டாகப் பறந்துவிடுவாள். சில நிமிடங்கள் தாமதமானாலும் அவளின் இதயத்துடிப்பு வெளியே கேட்கும் அளவிற்கு பதற்றம் ஆவாள். இதற்கு நடுவில் மாலை 4 மணியிலிருந்து, ஸ்கூல் விட்டு வந்துட்டியா, கதவை யார் தட்டினாலும் திறக்காத என தன் ஆறு வயது மகளுக்கு ஏதோ ஒன்றை போனில் வலியுறுத்திக்கொண்டே இருப்பாள்.

பெண் குழந்தை மாதிரிப்படம்

உனக்கு என்ன ஆறு மணிக்கு கிளம்பிருவ என பலரும் இதுவரை அவளை கேலி பேசியதுண்டு. அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்வாள் அவற்றை... கேலிகள், விமர்சனங்கள் தொடர்ந்ததாலோ என்னவோ ஒரு நாள் என்னிடம் வெடித்து அழுதாள். " ஆபீஸ் வேலைகளை முடிச்சுட்டு கிளம்பினாலும் கிண்டல் பண்ணத்தான் செய்யுறாங்க. இவங்க கேலி கிண்டல்களுக்கு பயந்தே நான் வேலை நேரத்தில் டீ குடிக்கக்கூடப் போறது கிடையாது. காலையில நாலு மணிக்கு எந்திரிக்கணும். சமையல் செய்து, மகளை பள்ளியில விட்டுவிட்டு அரக்கப்பரக்க சாப்பிட்டும், சாப்பிடாமலும் டிரெய்ன் ஏறணும். அப்படி ஓடி வந்தே சில நேரம் அலுவலகத்திற்கு வர லேட்டாகுது. மற்றவர்களின் விமர்சனங்களைக் கேட்கும்போது நான் அம்மாவாக இருக்கத் தகுதியானவள் இல்லையோங்கிற அளவுக்கு மூளை யோசிக்குது. இதை வீட்ல சொன்னா, வேலய விட்ருனு ஈஸியா சொல்லுவாங்க" என அவள் கண்ணீர் வடித்தபோது சமாதானம் செய்ய வார்த்தைகள் இல்லை என்னிடம். 

குழந்தை வளர்ப்பு எப்போதும் பெண்களைச் சார்ந்து இருப்பது எதனால். அதை தாய்மை என புனிதப்படுத்தியது எதனால் என்ற கேள்விகளுக்குக்கெல்லாம் எப்போது யோசித்தாலும் பதில் கிடைத்ததே இல்லை.

எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும். பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வோம். அங்கு ராமு அக்கா காட்டு வேலை செய்வாள். குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் குழந்தையுடன் மீண்டும் வேலைக்கு வந்தாள். குழந்தையை அங்குள்ள ஒரு மரத்தடியில் தூங்கவைத்துவிட்டு வேலை செய்வாள். குழந்தை அழும் போது  துண்டால் குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு குழந்தையிடம் பேசிக்கொண்டே கடலை அறுக்கும் அவளின் கைகளையும், தடம் பதிந்த அவளின் தோள் பட்டையையும் பார்க்கும் போதெல்லாம், மனசு வலிக்கும். புள்ளைய வூட்டுல விட்டுட்டு வரலாம்ல என யாராவது கேட்டால், நீயா பாக்குற என கடிந்து கொள்வாள்.

மாதிரிப்படம்

கடலை பறிப்பது, பால் புகட்டுவது, மாதவிடாய் நாளில் துணி மாற்றுவது, சாப்பிடுவது எல்லாம் அந்தக் குழந்தையுடன்தான். குழந்தை கண் அசரும் சில நிமிடங்கள்தான் அவளின் தோள்பட்டைக்கு ஓய்வு. வழக்கம்போல்  தொட்டிலில் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, ஏதோ பூச்சி கடித்து குழந்தை வீறிட்டு அழுதது. வைத்தியங்கள் பார்த்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனது. ராமு அக்காவை ஊர்மக்களும் , அவளின் குடும்பமும் கொலைகாரி என்றெல்லாம் பேசி, அவளையும் மனநலன் பாதிப்படையச் செய்தார்கள். ராமு அக்காவை வசை பாடி, கேள்வி கேட்டவர்கள் யாரும் ஏன் அவளின் கணவரை எதுவும் கேட்கவில்லை. கணவரும் பழியைப் பகிர்ந்துகொள்ள முன்வரவில்லை. ஏனெனில் குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது அம்மாவின் பொறுப்பு என்பது இங்கு ஆணித்தரமாக விதைக்கப்பட்டிருக்கிறது. மனைவியை இழந்த பின் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் குழந்தைகளுக்காக வாழும் கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், சொற்பமானவர்களே.

குழந்தையை வளர்ப்பதில் உதவி செய்ய ஆண்கள் வந்தால் கூட நாங்கள்லாம் அந்தக் காலத்துல குழந்தைகளை வளர்க்கலையா, இப்ப எல்லாம் அதிசயமாகத்தான் இருக்கு! என மாமியார், அம்மா தலைமுறையினர் தன் மகன்களை, மருமகன்களை காபாற்ற போர்க்கொடி தூக்கி வந்துவிடுவார்கள். ஆனால்,  அவர்கள் தலைமுறையில் குழந்தைகள் வளர்ந்ததற்கும், இப்போதைய தலைமுறை குழந்தைகள் வளர்வதிலும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

அம்மா, மகள்

நான் வளரும்போது பள்ளிக்கூடம் சென்று வந்தால் போதும். வீட்டுப்பாடம் குறித்துகூட என் அம்மா என்னை கேள்விகேட்ட நினைவு இல்லை. ஆனால்,  இன்று புராஜெக்ட் என்ற பெயரில் என் குழந்தைக்காக  நான் இரவு முழுவதும் விழித்திருக்கிறேன். நான் விழித்திருப்பது பற்றி எந்தக் கவலையும் என் குடும்பத்திற்கு இல்லைதான். அவர்கள் கவலையெல்லாம் காலை நேர காபியும், டிபனும் சரியான நேரத்தில் கிடைக்குமா என்பதாகவே இருக்கிறது.

நான் வளரும்போது பள்ளி முடிந்து வந்ததும் மாலை நேரம் தெருவில்தான் விளையாடுவோம்.  இன்று போட்டி உலகில் ஸ்விம்மிங், சிலம்பம், கேரம் , டியூஷன் என ஏதோ ஒரு வகுப்பிற்கு மாலை குழந்தையை அழைத்துக்கொண்டு பறக்க வேண்டும். அப்படி எதுவும் வேண்டாம் என்று இருந்தால், பிள்ளைய எதுலயாவது சேர்த்துவிடு என அதையும் கேள்வி கேட்கிறார்கள். எனக்கு காய்ச்சல் என்றால் அம்மா கசாயம் தான் வைத்துக்கொடுப்பார். இன்று இருக்கும் அம்மாக்கள் அப்படியிருந்தால் அவ்வளவு தான்... குடும்பமே  சேர்ந்து நல்ல அம்மாயில்லை, குழந்தையைப் பார்த்துக்கத் தெரியவில்லை என பட்டம் கட்டிவிடுவார்கள் அதற்கு  பயந்தே குழந்தை லேசாக இருமியவுடன் மருத்துவமனைக்கு ஓடும் அம்மாக்கள் இருக்கிறார்கள்.

குழந்தைகள்

வாரத்தில் 5 நாள்கள் கஞ்சி சாப்பிட்ட குழந்தைகளை வளர்த்த சமூகத்திற்கு எங்கிருந்து புரியப் போகிறது விதவிதமான லன்ச் ரெசிப்பிகளை கேட்கும் குழந்தைகளின் நச்சரிப்புகளும் அம்மாக்களின் யூடியூப் தேடல்களும்... இரவு முழுவதும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அந்த அம்மாதான் பார்த்துக்கொள்ள வேண்டும். பயம், பதற்றம் அடுத்தநாள் வேலை என எல்லாம் அம்மா சார்ந்ததாகவே இருப்பதே சிக்கல். வீட்டு வேலை, அலுவலக வேலை, மீண்டும் வீட்டு வேலை என எல்லாம் முடித்து இரவு 11 மணிக்கு யூனிஃபார்ம் துவைப்பது இன்னும் அம்மாவின் பொறுப்பாகவே இருக்கிறது . இன்னும் சில வீடுகளில் குழந்தைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு மணிக்கு ஒரு முறை கால் செய்து குழந்தை தூங்கல, சாப்பிடல என மாமியாரும், அம்மாவும் சொல்லுவது பெண்களை கூடுதல் குற்ற உணர்வில் தான் தள்ளும். 

பொருளாதார பங்களிப்பு மட்டுமே குழந்தை வளர்ப்பில் அப்பாவின் கடமை இல்லை. பணிக்குச் செல்லும் அம்மா, குழந்தை வளர்ப்பையும் பார்த்துக்கொள்ளும்போது, அப்பாக்கள் மட்டும் ஏன் அதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறார்கள். குழந்தைகளுடன் இருந்து, அவர்களுக்காக நடந்து, ஓடி, ஓய்வு தேவைப்படும் வயதிலும் அவர்களுக்காக யோசிப்பது. இவையெல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது... குழந்தையைக் குளிப்பாட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மருத்துவமனையில் உடன் இருப்பது, ஹோம் வொர்க் செய்ய உதவுவது, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என சின்னச் சின்ன விஷயத்தில் இருந்து தொடங்கவேண்டும்.

குந்தைகளை வளர்ப்பது என்பது குடும்பத்தின் பங்காக மாறவேண்டும். குழந்தை வளர்க்கிறோம் என எத்தனை நாள்கள்தான் அம்மாக்கள் தன் வளர்ச்சியைக் குறைத்துக்கொள்வது.? எங்களுக்கு தாய்மை புனிதம் என்ற பெயர்கள் எல்லாம் வேண்டாம். கூண்டிற்குள் அடைபட்ட குருவிக்கு சிறகு எதற்கு.? சமமாக உடனிருங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் வளரட்டும். சிறகு வெட்டப்படவில்லை, அடைக்கப்பட்டிருக்கிறது. கதவைத் திறங்கள். சிறகு விரியட்டும். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.