Anant Ambani Wedding: மணமக்களை நேரில் ஆசீர்வதித்த மோடி; அம்பானி மகன் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்
நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக கருதப்படும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், மும்பையில் 12-ம் தேதி மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. இத்திருமணத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர். அதோடு பாலிவுட் பிரபலங்கள், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் என திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. திருமணத்தில் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. திருமணத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக மணமக்களை ஆசீர்வதிக்கும் `சுப் ஆசீர்வாத் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதிலும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள தவறவில்லை. மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்தார்.
மணமக்கள் பிரதமரின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். பிரதமர் மோடி தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முதல் இருக்கையில் அமர்ந்து முகேஷ் அம்பானியுடன் பேசிக்கொண்டிருந்தார். விழாவில் பாலிவுட்டை சேர்ந்த ஆலியா பட், ரன்பீர் கபூர், மாதுரி தீட்ஷித், நடிகர் ஷாருக் கான், கெளரி கான், சுஹானா கான், நடிகை ராஷ்மிகா, ஐஸ்வர்யா ராய், ஜான்வி கபூர், விக்கி கெளஷல், கேத்ரீனா கைஃப், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, ஹேமமாலினி, பவன் கல்யான், சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடு, அனன்யா பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆன்மிக தலைவர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் ஆலியா பட்டும், ரன்பிர் கபூரும் தனித்தனியாக வந்து தனித்தனியாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தது அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுக்கும் வகையில் இருந்தது. திருமணத்தில் உணவு சமைப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பிரபல சமையல் கலைஞர்கள் வந்திருந்தனர். பெரு நாட்டில் இருந்து உலகின் நம்பர் ஒன் ரெஸ்டாரண்டில் இருந்து ஒரு சமையல் கலைஞர் வரவழைக்கப்பட்டு இருந்தார். குஜராத் திருமணம் என்பதால் அனைத்து உணவு வகைகளும் சைவமாக இருந்தது. ஆனால் சைவத்தில் உலகில் அனைத்து வகையான உணவுகளும் திருமணத்தில் பரிமாறப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு மும்பையில் 29,400 கோடி மதிப்பிலான கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். இதில் 16,600 கோடி மதிப்பிலான தானே-போரிவலி சுரங்க சாலை திட்டம், கோரேகாவ்-முலுண்ட் இணைப்பு சாலையில் ரூ.6,300 கோடியில் இரட்டை சுரங்கம் அமைப்பது போன்ற பணிகளும் அடங்கும். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது அரசு கடந்த நான்கு ஆண்டில் 8 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டார். மகாராஷ்டிரா நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், மகாராஷ்டிரா நாட்டின் சுற்றுலா சுற்றுலா தலைநகரமாக இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி மும்பை வந்திருந்தார்.
திருமணத்திற்கு வந்திருந்த ஆனந்த் அம்பானியின் நெருங்கிய நண்பர்கள் 25 பேருக்கு மட்டும் மிகவும் அதிக விலையுள்ள வாட்ச் கிப்டாக கொடுக்கப்பட்டது. அதன் மதிப்பு கோடிகளில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


