`கொன்னு போட்டா கூட யாரும்..!’ - ஒடிசா ராஜ்பவனில் அதிகாரியை தாக்கியதாக ஆளுநரின் மகன் மீது புகார்
ஒடிசா ஆளுநர் மாளிகையில் பைகுந்த பிரதான் (47) என்ற அதிகாரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகைக்கான தயாரிப்பை மேற்பார்வையிடுவதற்காக, ராஜ்பவனில் வீட்டு உதவிப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார், பூரி ரயில் நிலையத்திலிருந்து தன்னை அழைத்துச் செல்ல சொகுசு கார்களை அனுப்பாத அதிகாரிமீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பைகுந்த பிரதான் கூறியதாவது, ``கடந்த ஜூலை 7-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, ஆளுநரின் தனிப்பட்ட சமையல்காரர் என் அறைக்கு வந்து, லலித் குமார் அழைப்பதாக கூறினார். நானும் அவரைப் பார்க்க சென்றபோது, ஆபாசமான வார்த்தைகளால் என்னைத் திட்டினார். இதுபோல அவமானப்படுத்த வேண்டாம் எனக் கூறியதும் என்னை அடிக்கத் தொடங்கினார். அதனால், நான் அவர் அறையைவிட்டு வெளியேறி மற்றொரு இடத்தில் ஒளிந்துகொண்டேன்.
ஆனால், அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் என்னை இழுத்துச் சென்று மற்றொரு அறையில் விட்டார்கள். அங்கு என்னை சாரமாரியாக அடித்து துன்புறுத்திய லலித் குமார், உடலின் பல பகுதிகளில் உதைத்தார். என் இடது காலை முறுக்கினார். இதை அங்கிருந்த பாதுகாவலர்களும், பணியாளர்களும் பார்த்துகொண்டிருந்தனர். மேலும், `உன்னைக் கொன்னு போட்டா கூட இங்க யாரும் காப்பாத்த வரமாட்டாங்க... என மிரட்டினார்.

ஜூலை 8-ம் தேதி மாலை 04.30 மணியளவில் ஆளுநரின் முதன்மைச் செயலரிடம் நடந்த அசம்பாவிதத்தை வாய்மொழியாக விவரித்தேன். ஜூலை 10-ம் தேதி கடிதத்தையும் தபாலில் அனுப்பினேன்." எனக் குறிப்பிட்டார்.
இதுவரை, ஆளுநர் மாளிகையோ, காவல்துறை தரப்போ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கவோ, பதிலளிக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை. இது தொடர்பாக பைகுந்த பிரதானின் மனைவி செய்தியாளர்களிடம், ``எனது கணவர் குடியரசுத் தலைவரின் பணிக்காக அனுப்பப்பட்டார். ஆளுநரின் மகனுக்கு சேவை செய்ய அல்ல. தற்போது என் கணவர் பூரி மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


