`திருமணத்தை தடுக்க நினைக்கிறியே, நீ நல்லா இருப்பியா?’ - வைரலாகும் இளைஞர்களின் எச்சரிக்கை போஸ்டர்கள்
ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை பெற்றோர்கள் சந்தித்து வருகிறார்கள். அரசு வேலை, சொந்த தொழில், சொந்த வீடு, அந்தஸ்து, ஒரே சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுக்குப் பிறகும் ஜாதக பொருத்தங்களால் பல திருமணங்கள் தடைபடுகின்றன. நகர்ப்புறங்களில் வாழும் ‘2-கே கிட்ஸ்’ தலைமுறையினரும், அவர்களது பெற்றோரும் சமூக மாற்றத்தால் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாலும், கிராமப் புறங்களில் இன்னும் அந்த நிலைக்கு பெரும்பாலும் இன்னும் வரவில்லை.
இதனால் கிராமங்களில் இளைஞர்களுக்கு சமூக அமைப்பு ரீதியாகவே திருமணங்கள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் வரன்களை பெண் வீட்டார் விசாரிக்கச் செல்லும் போது அவர்களிடம் வரன்களைப் பற்றி புகார் சொல்லும் பழக்கங்கள் இன்னும் நிலவுகிறது. இதனால் இளைஞர்களுக்கு திருமணங்கள் தடைபடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. இதே போல் பாதிக்கப்பட்ட நெல்லை இளைஞர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகிலுள்ள பொன்னாக்குடியில் இதுபோன்ற போஸ்டர்கள் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வரன் பார்க்கச் செல்லும் பெண் வீட்டாரிடம் சிலர் குறை கூறுவதாகவும் அதனால் சில திருமணங்கள் பேச்சுவார்த்தையோடு நின்றதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே.. நீ எத்தனை வருசம் நல்லா வாழ்ந்துருவ? உன் பிள்ளைக்கு இந்த மாதிரி வந்தா?

கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறியே? புறம் பேசி தடுக்க நினைக்கிறியே? ஒருத்தனுக்கு நல்லது நடக்குறதை கெடுக்க நினைக்கிறியே நல்லா இருப்பியா?” எனக் குறிப்பிட்டு, அத்துடன் குறிப்பு எனக் குறிப்பிட்டு அதில், “சில நபர்களின் அடையாளம் தெரியும். அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டு எச்சரித்துள்ளனர். ஊரில் திரும்பும் திசையெங்கும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதே போஸ்டர்களை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


