`தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் - ஷாக் ரிப்போர்ட்டும், பகீர் பின்னணியும்!
இந்தியாவில் கடந்த 2006-ம் ஆண்டு குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி பெண், ஆண்களுக்கான திருமண வயது முறையே 18, 21 ஆக இருக்கிறது. இந்த வயதை பூர்த்தி செய்யாமல் திருமணம் மேற்கொள்ளும் பட்சத்தில் அது குழந்தை திருமணமாக கருதப்படும். பிறகு சம்மந்தப்பட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அதாவது இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் திருமணம் செய்து வைக்கும் நபர்களுக்கும் இந்தத் தண்டனை கொடுக்கப்படும். மேலும் இந்த சட்டத்தின்படி 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில்தான் அறிவொளி மற்றும் தன்னார்வ நடவடிக்கைக்களுக்கான சமூகம் என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், பல்வேறு மாநிலங்களில் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்ட வழிமுறைகள் மாநில அரசுகள் முறையாக பின்பற்றவில்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் நடந்த குழந்தை திருமணங்கள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.
அதில் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரா, போன்றவை குழந்தை திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் 8,966, கர்நாடகாவில் 8,348, மேற்கு வங்கத்தில் 8,324, தெலங்கானாவில் 4,440, ஆந்திராவில் 3,416, அஸ்ஸாமில் 3,316, மகாராஷ்டிராவில் 2,043, குஜராத்தில் 1,206, உத்தரப்பிரதேசம் 1197, ஹரியானாவில், 1,104 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. மேலும் பல இடங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று இருந்தாலும், பதிவு செய்யப்படும் எஃப்ஐஆர் குறைவாகவே இருக்கிறது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்" என கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை" என அதிருப்தி தெரிவித்துள்ளனர், மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா, "முதலில் குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். பெண்கள் வளர்ந்துவிட்டால் அவர்களுக்கு பிடித்த நபரை திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற அச்சத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்துவதன் மேல்தான் சாதியை காப்பாற்றும் அடிமைத்தனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுதந்திரத்தை குழந்தையிலேயே முடக்குவதற்குதான் இதையெல்லாம் செய்கிறார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த விருப்பத்தையும் நிராகரித்து விடுகிறார்கள்.
ஆண்களுக்கு எப்படி திருமணத்தில் சுதந்திரம் இருக்கிறதோ அதே அளவுக்கு சுதந்திரம்தான் பெண்களுக்கும் இருக்கிறது. ஆகவே குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோரை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கிராமங்களில் இருப்போருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேநேரத்தில் திருமணம் செய்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.

சாதியை காப்பாற்றுவதற்காக பெண்களை பலி கொடுக்கும் போக்கு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஒன்று குழந்தையாக இருக்கும் போது திருமணம் செய்து வைப்பார்கள். இல்லையென்றால் கணவன் இறந்த பிறகு கொன்றுவிடுவார்கள். எனவே இதை தடுக்க அரசுதான் முனைப்பு காட்ட வேண்டும். குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் தண்டனை குறித்து மட்டும்தான் பேசுகிறது. காரணங்கள் குறித்து பெரிதாக பேசவில்லை. பெற்றோருக்கு ஏற்படும் சமூக அழுத்தத்தை தடுப்பதற்கு செய்ய வேண்டியது குறித்து அதில் எதுவும் இல்லை. எனவே குழந்தை திருமணத்துக்கான பண்பாட்டு வேர்கள் குறித்து கேள்வி கேட்க வேண்டும். அதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சட்டத்தில் சேர்க்க வேண்டும்" என்றார்.
தமிழகம் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் திருமணம் குறித்த வழக்குகள் அதிகமாக பதியப்படுகிறது. சில இடங்களில் முறையாக வழக்குகள் பதியப்படுவதில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
பொருளாதார, சமூக சிக்கல்கள் காரணமாக அதிகமாக குழந்தை திருமணங்கள் நடக்கிறது. அரசு, குழந்தை திருமணங்களை தடுக்கும் அதே வேளையில், அதன் உண்மையான காரணங்களை அறிந்து, அந்த சிக்கல்கள் குறித்து ஆலோசித்து அதனை தீர்க்க வழிகளை நடவடிக்கையாக எடுக்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


