Gambhir: இந்திய வீரர்கள் 3 வித ஃபார்மேட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்! - கம்பீர் கண்டிஷன்
கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.
ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள கம்பீர் பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய வீரர்கள் மூன்று வித கிரிக்கெட் ஃபார்மேட்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
"நான் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு வீரரும் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வித கிரிக்கெட் ஃபார்மேட்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பிட்ட ஒரு வீரரை ஒரு ஃபார்மேட்டில் விளையாட வைப்பதற்காக அவரை மற்ற ஃபார்மேட்களிலிருந்தோ, தொடர்களிலிருந்தோ தவிர்க்கப் போவதில்லை. எனக்கு அதில் பெரிய நம்பிக்கையும் இல்லை. குறிப்பிட்ட ஒரு வீரரைக் காட்டிலும் அணியின் நலனே முக்கியம். இங்கு அணிதான் எல்லாம்!
வீரர்களுக்கு விளையாட்டில் காயங்கள் ஏற்படுவது சகஜம்தான், ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து அவர்களது முழு திறனை வெளிப்படுத்த வேண்டும். இவர் டெஸ்ட் வீரர், இவர் டி20 வீரர் என்ற முத்திரை குத்தக் கூடாது. உங்கள் நாட்டிற்காக விளையாடும் போது, உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க வேண்டும். நீங்கள் சிறந்த பார்மில் இருக்கும் போது அனைத்து வித கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும்.

உங்கள் தொழிலில் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும். நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என எதையும் நினைக்கவில்லை. என்னால் முடிந்தவரை நேர்மையாக இருக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


