Ambani Wedding: மெட்ராஸ் பில்டர் காபி டு வாரணாசி பானி பூரி - அம்பானி வீட்டுத் திருமண விருந்து!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா இன்று மாலை மூன்று மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் என ஹைபுரோஃபைல் வி.வி.ஐ.பிகள் இத்திருமணத்திற்கு வருகை தந்த வண்ணமிருக்கின்றனர். இத்திருமண விழாக் கொண்டாட்டத்திற்காக சுமார் 5000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வரும் இத்திருமண விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் விருந்திற்காகத் தயாராகியுள்ளன.
இவற்றைத் தயார் செய்வதற்குப் பிரத்யேகமாக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்கள் (செஃப்) வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உலகின் பிரபல உணவுகள் இவ்விருந்தில் இடம்பெற்றிருக்கும் அதே சமயம் இந்தியாவின் சிற்றுண்டி உணவு வகைகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் மெட்ராஸ் பில்டர் காபி தொடங்கி வாரணாசி பானி பூரி வரை இந்தியாவின் அனைத்து மாநில உணவுகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நீதா அம்பானிக்கு மிகவும் விருப்பமான வாரணாசியின் காசி நகரில் அமைந்துள்ள Kaashi Chaat Bhandar எனும் சிற்றுண்டி உணவகத்தின் பனாரஸ், டிக்கி, டொமேடோ சாட், சன்னா கச்சோரி, பாலக் சாட் மற்றும் குல்பி உள்ளிட்ட உணவு வகைகளும் அம்பானியின் இன்றையத் திருமண விருந்தில் இடம்பெற்றுள்ளன.

இந்திய உணவுகளைத் திருமண விருந்திற்காகத் தேர்ந்தெடுக்கும் நீதா அம்பானியின் உணவு சுற்றுலாப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜூன் 24ம் தேதியே இந்த Kaashi Chaat Bhandar கடைக்குச் சென்றிருந்தார் நீதா அம்பானி. அங்கு மிகுந்த ஆர்வத்துடன் கடையிலிருக்கும் ஒவ்வொரு உணவையும் அவர் சுவைத்து சாப்பிட்ட காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தது. தற்போது அந்தக் கடையின் சிற்றுண்டிகள் அனைத்தும் திருமண விருந்தில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


