ட்ரோன், ஹைட்ரோபோனிக்ஸ், ஏ.ஐ, தோட்டக்கலை செடிகள்... வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டங்கள்!
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நகர்ப்புற மக்களுக்கென தோட்டக்கலை செடிகள் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி உள்ளிட்ட பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 2005 ஆம் ஆண்டு முதல் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் வாயிலாக பட்டயப்படிப்புகள், சான்றிதழ் பாடங்கள், இணையவழிக் கல்வி போன்றவை கற்பிக்கப்பட்டு வருகிறது.
வரவேற்பை பெற்ற வேளாண் படிப்புகள்
இதன் மூலம் உழவர்கள், வேளாண் துறையில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள், சுய தொழில்முனைவோர் போன்றோர், பல்வேறு சான்றிதழ் படிப்புகள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர பட்டயப்படிப்புகளில் சேர்ந்து, தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதைச் சார்ந்த வேலை வாய்ப்புகளையும் பெற முடியும்.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில், 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக காளான் வளர்ப்பு, மூலிகைப் பயிர்கள் சாகுபடி, தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், நவீன கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு போன்றவற்றுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதைப் படித்து பலர் மதிப்புக் கூட்டு தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பாடங்கள் என்னென்ன?
இந்நிலையில், நடப்பு 2024-25 கல்வியாண்டில் மேலும் சில பாடத்திட்டங்களை வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி, பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் (Protected Cultivation), செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணையவழி தொழில்நுட்பங்கள் (Smart Farming) மற்றும் வேளாண்மையில் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் (Drone Technology) உள்ளிட்ட புதிய பட்டயப்படிப்பு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி வெளியிட்டுள்ளார்.

நகர்ப்புற மக்களுக்கான படிப்புகள்
அதேபோல், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், 15 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. இதில் அலங்காரத் தோட்டம், அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் அடங்கும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் வேளாண்மைக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களில், இப்படிப்புகள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் வழங்கப்படுகின்றன.
கூடுதல் விவரங்களுக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தை, 94421 11048 / 94890 51046 /0422-6611229 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.tnau.ac.in இணையதளத்தையும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


