TTF Vasan: `மீண்டும் மீண்டுமா..! திருப்பதி கோயிலில் பிராங்க்; சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!
பிராங்க் என்ற பெயரில் பொது இடங்களில் சில யூடியூபர்கள் செய்யும் செயல்கள், பொதுமக்களிடையே சலசலப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடும். அதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சமீபத்தில் சாமி தரிசனத்துக்காக நண்பர்களுடன் திருப்பதி சென்றிருக்கிறார் டிடிஎஃப் வாசன். பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் இருப்பார்கள்.
திருப்பதியில், பக்தர்களை அறை அறையாக காத்திருக்க வைக்கும் பழக்கம் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒரு அறையில் க்யூ வகையில் காத்திருக்க வைக்கப்பட்டிருப்பார்கள். அந்த கதவு அருகிலேயே பக்தர்கள் நடை திறப்பதற்காக காத்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு சூழலில்தான் டிடிஎஃப் வாசனும் அவரின் நண்பர்களும், நடை திறக்கும் ஊழியர் போல செயல்பட்டிருக்கின்றனர். பக்தர்கள் அவசர அவசரமாக எழுந்து வரிசைக்கு தயாராகும் போது, வடிவேலு காமெடியில் வரும் "டர்ர்ர்ர்.... ஓடிட்டேன்ல...." எனக் கூறி அங்கிருந்து சிரித்துக் கிண்டல் செய்துகொண்டே சென்றுவிட்டார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பல்வேறு விமர்சனங்களையும், கண்டனங்களையும் பெற்றது. இந்த நிலையில், ``சாமி தரிசனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்ய முயன்றபோது விபத்திலும், சர்ச்சையிலும் சிக்கினார்.

அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை பாலுசெட்டிசத்திரம் காவல்துறை கைது செய்தது. ஜாமீன் பெற்ற அவர் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்றபோது, காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 30-ம் தேதி மதுரை காவல்துறை அவரை கைது செய்தது. அந்த வழக்கிலும் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கும் நிலையில், தற்போது இந்த பிராங்க் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


