`ரூ.2 கோடி சொத்துக்கு, ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாதா?- கூடலூர் பெண் தாசில்தார் கைது பிண்ணனி
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவின் வட்டாட்சியராக நேற்று மாலை வரை பதவி வகித்து வந்தவர் ராஜேஸ்வரி. அலுவல் நிமித்தமாக இவரைச் சந்திக்கும் மக்களிடம் பகிரங்கமாக லஞ்சம் கேட்பதை வாடிக்கையாகச் செய்து வந்திருக்கிறார். லஞ்சம் வழங்குபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து , பணிகளை முடித்து கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ராஜேஸ்வரியின் லஞ்சம் தொடர்பாக கூடலூர் மக்கள், மாவட்ட நிர்வாகத்திடமும் புகாராக முறையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கூடலூரைச் சேர்ந்த உம்மு சல்மா என்ற பெண், தனக்குச் சொந்தமான நிலத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என வட்டாட்சியர் ராஜேஸ்வரியை அணுகியிருக்கிறார். நிலத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என்றால், 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக வேண்டும் என உம்மு சல்மாவிடம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி பகிரங்கமாக கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உம்மு சல்மா, ஊட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதையடுத்து, ராஜேஸ்வரியை ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக அவரைக் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ``தாய் தந்தையை இழந்த பட்டதாரி பெண் உம்மு சல்மா, கூடலூர் தோட்ட மூலா பகுதியில் உள்ள குடும்ப நிலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கின் எல்லையை வரையறை செய்து கொடுக்க தாசில்தார் ராஜேஷ்வரியிடம் மனு அளித்துள்ளார். அதற்கான கட்டணத்தையும் முறையாக செலுத்தியிருக்கிறார். தொடர்ந்து அலைக்கழிப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார். தாசில்தாரை 4-வது பிரதிவாதியாக அறிவித்து, நில அளவை மற்றும் எல்லையை வரையறை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், ரூ.2 கோடி சொத்துக்கு ரூ. 2 லட்சம் லஞ்சமாக கொடுக்க முடியாதா? என உம்மு சல்மாவிடம் 2 லட்சம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி, உம்மு சல்மா மூலம் தாசில்தார் ராஜேஷ்வரியிடம் நேற்று மாலை லஞ்சமாக கொடுக்கச் செய்தோம். லஞ்சத்தை வாங்கிய தாசில்தார் ராஜேஷ்வரியை கையும் களவுமாக கைதுசெய்தோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


