மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: 2,200 மரங்கள் அடங்கிய குறுங்காட்டை அழிக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு!
சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்காக, மதுரவாயல் மேம்பாலம் அருகே சுமார் 2,200 மரங்களை வெட்டுவதற்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), சென்னை மாவட்ட பசுமைக் குழுவிடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்து வதற்காகவும், துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும், 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் `மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம். இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகக் கருதப்பட்ட இத்திட்டத்தில் 15% பணிகள் முடிவடைந்த நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
மீண்டும், 2021-ம் ஆண்டு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த ஈரடுக்கு பறக்கும் சாலை, மொத்தம் 604 தூண்களால் அமைக்கப்பட உள்ளது. இதில், 375 தூண்கள் கூவம் ஆற்றின் பகுதிகளிலும், 210 தூண்கள் கடலோர பாதுகாப்பு ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளிலும் அமையவிருக்கின்றன.
அதன்படி 20.56 கி.மீ நீளத்துக்கு, ரூ.5,855 கோடி செலவில் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு, கடலோர மண்டல மேலாண்மை அனுமதி வழங்க, மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவும் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் தந்தது.

தற்போது துறைமுக பறக்கும் சாலை பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், இத்திட்டத்துக்காக மதுரவாயல் மேம்பாலத்துக்கு அருகே உள்ள குறுங்காட்டில் இருக்கும் மரங்களை வெட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவை சென்னை மாவட்ட பசுமைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
ரூ.6.64 கோடி செலவில், புறவழிச்சாலையில் காடுகள் வளர்ப்பு திட்டத்தில், வனத்துறையால் இக்குறுங்காட்டில் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், பாலம் பணிகளுக்காக, குறுங்காட்டில் இருக்கும் சுமார் 2,200 மரங்களை வெட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வந்துள்ளது.
நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இந்த இடத்தில் அடர்ந்த பசுமையான குறுங்காட்டை ஏன் நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கியது? திரும்பவும் அதை ஏன் வெட்டுகிறது? சென்னையில் பசுமை பரப்பு குறைந்து வரும் நிலையில் குறுங்காடுகள்தான் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. இதையும் வெட்டி அப்புறப்படுத்திவிட்டால் சென்னையில் பசுமையைப் பார்ப்பதே அரிதாகிவிடும் எனப் பசுமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மதுரவாயல் குறுங்காட்டில் 2,200 மரங்களை வெட்டுவது தொடர்பாக, சென்னை மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ``நெடுஞ்சாலை ஆணையத்தின் முன்மொழிவு இன்னும் மாவட்ட பசுமைக் குழுவின் பரிசீலனையில்தான் உள்ளது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


