MM Keeravani: ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு பாடல்தான் என் சிறந்த படைப்பா?- கீரவாணி ஓபன் டாக்

“பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கான என்னுடைய இசையை ஒப்பிடும்போது, ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பல்ல” என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்திருக்கிறார்.

ராஜமௌலி இயக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியான திரைப்படம் ‘RRR’. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்படப் பலர் நடித்திருந்த இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்திருந்தது. உலகம் முழுவதும் பல விருது விழாக்களில் இப்படம் பங்கேற்றது.

‘RRR’

அதில் கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதினையும், ஆஸ்கர் விருதினையும் வென்றது. இந்நிலையில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று எம்.எம்.கீரவாணி கூறியிருக்கிறார். இதுதொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், "தாமதமாகவோ அல்லது முன்னதாகவோ, எனக்கு ஒரு பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அதே சமயம் உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒருவகையில் எங்கிருந்ததாவது வந்து சேரும். ஆனால், அது தாமதமாகிவிட்டதாக நீங்கள் உணரலாம்.

எம்.எம்.கீரவாணி

உங்கள் வாழ்நாள் கடந்தாலும், தாமதமாகவோ, முன்னதாகவோ வர வேண்டும் என இருந்தால் கண்டிப்பாக அந்த அங்கீகாரம் உங்களை வந்து சேரும். ‘பாகுபலி 1’ மற்றும் ‘பாகுலபி 2’ போன்ற படங்களுக்கான எனது இசையை ஒப்பிடும்போது ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு அல்ல" என்று தெரிவித்திருக்கிறார் .

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.