அணைப் பகுதியில் சிக்கிய காட்டு யானை; சமயோசிதமாக மீட்ட பொதுப் பணித்துறையினர்!குவியும் பாராட்டு..!
முல்லை பெரியாறு அணையின் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுப் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் திறந்தவெளி கால்வாய் ஒன்று உள்ளது. இதில் தற்போது தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அருகே உள்ள சுரங்கக் கால்வாய் வழியாக இந்தக் கால்வாய்க்குத் தண்ணீர் வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முதல் போக சாகுபடிக்காக 1,200 கன அடி தண்ணீர் கடந்த ஜூன் மாதம் முதல் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேக்கடியில் உள்ள தண்ணீர் திறந்து விடப்படும் மதகு அருகே யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக வந்திருக்கிறது. நிலை தடுமாறிய யானை, தண்ணீர் திறந்து விடும் மதகு முன்பு தவறி விழுந்தது. தகவலறிந்த பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் யானையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடி உயரம் உள்ள நிலையில் விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்து வந்தது யானை. தண்ணீரின் வேகம் குறைந்தால் மட்டுமே யானையை மீட்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீரை முழுவதுமாக நிறுத்தினர் பொதுப்பணித் துறையினர். தண்ணீரை நிறுத்திய பிறகு, யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதும் வேகம் குறைந்தது. கால்வாயில் தண்ணீர் வருகை குறைந்ததால் யானை 1 கிலோ மீட்டர் வரை நீந்தி மறு கரையை அடைந்து தானாகவே காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது. சமயோசிதமாக செயல்பட்டு யானையை மீட்பதற்காக தண்ணீரை நிறுத்திய பொதுப்பணித் துறையினரையும், உடனிருந்த வனத்துறை யினரையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


