ஆலியா பட்- ரன்பீர் திருமண ஷூட்... நிராகரித்த வீடியோகிராபர்! ஏன் தெரியுமா?

மிகவும் வைரலான ஆலியா பட்- ரன்பீர் போன்ற பிரபலங்களின் திருமண நிகழ்வைப் பார்ப்பதே சுவாரஸ்யமான, புதுமையான அனுபவமாக இருக்கும். ஆனால், அதை ஷூட் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் வீடியோகிராபர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

தற்போது உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம். தினமும் ஒரு திருமணச் சடங்கு என்று பல நாள்களாக நடைபெற்று வரும் இவர்களின் திருமணம் குறித்த ஒவ்வொரு தகவலும், வீடியோவும் செம ஹிட்தான்.

தி வெடிங் ஃபிலிமர் நிறுவன உரிமையாளர் விஷால் பஞ்சாபி

இதேபோல் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் 2022-ல் நடைபெற்றது, பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் திருமணம். 2018-ம் ஆண்டிலிருந்து ஆலியாவும் ரன்பீரும் காதலித்து வந்தனர். 2022 ஏப்ரலில் மும்பையில் வி.ஐ.பி-க்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.

ஆலியா பட் - ரன்பீர் கபூர், தங்கள் திருமணத்தை வீடியோ பதிவு எடுக்க `தி வெடிங் ஃபிலிமர் நிறுவனத்தை அணுகி இருந்தனர். ஆனால், அந்த நிறுவனம் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. பிரபலங்களின் வீடியோவை ஷூட் செய்யும் வாய்ப்பை ஏன் அந்த நிறுவனம் ஏற்கவில்லை தெரியுமா?

தி வெடிங் ஃபிலிமர் நிறுவன உரிமையாளரான விஷால் பஞ்சாபி, ஏற்கெனவே பல பிரபலங்களின் திருமண வீடியோவை ஷூட் செய்து அசத்தி இருக்கிறார். ஆச்சர்யப்பட வைக்கும் அசாத்திய வீடியோ திறமையால் பிரபலங்களின் திருமண நிகழ்வை மேலும் அழகூட்டியவர் விஷால்.

குறிப்பாக, தீபிகா படுகோன்-ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி, சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி மற்றும் ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா போன்ற பிரபல ஜோடிகளுக்கு பிரமிக்க வைக்கும் திருமண வீடியோக்களை படமாக்கி உருவாக்கியுள்ளார்.

ஆனால், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் திருமண வீடியோவை எடுக்க ஏன் ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை விஷால் பஞ்சாபி விளக்கி இருக்கிறார்.

இது குறித்து விஷால் பஞ்சாபி கூறுகையில், ``ஆலியா- ரன்பீர் திருமணத்துக்கு வீடியோ ஷூட் செய்ய என்னை அணுகினர். ஆனால், அவர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. திருமணத்துக்கு சில வாரங்களுக்கு முன்புதான், அவர்கள் என்னை தொடர்புகொண்டனர்.

ஆலியா திருமணம் நடைபெறும் நாளில் ஏற்கெனவே லண்டனில் நடைபெறும் திருமணத்துக்கு நான் ஒப்புக்கொண்டுவிட்டேன். அங்கு ஓர் அழகிய தம்பதியின் திருமண நிகழ்வை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். பிரபலங்களின் திருமணத்தை ரகசியமாக வைக்கப்பட்டு, திடீரென்றுதான் அறிவிப்பார்கள். அதனால்தான் என்னை கடைசி நேரத்தில் அணுகினர்.

தி வெடிங் ஃபிலிமர் நிறுவன உரிமையாளர் விஷால் பஞ்சாபி

அதே நேரம், ஒரு பிரபலத்தின் திருமணம் என்பதற்காக, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திருமணத்தை ரத்து செய்ய முடியாது. ரன்பீர் மற்றும் ஆலியாவுக்கு, இதைவிட ஒரு நல்ல திருமண வீடியோ கிடைத்திருக்கும்" என்றார்.

பணம், புகழ் கிடைக்கும் என்பதற்காக ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியை ஒதுக்கித் தள்ளாமல், முதலில் அணுகியவரே முக்கியம் என்ற கடமை உணர்வோடு விஷால் செயல்பட்டுள்ளார். வீடியோகிராபர் விஷாலின் இத்தகைய தொழில் கடமைதான், அவரை உச்சத்தில் நிறுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.