Freedom 125 CNG: இந்த பைக்கில் ஏன் பெரிய டேங்க் வைக்கலனு தெரியுமா? பஜாஜ் சொல்லும் நியாயமான காரணம்!

பஜாஜ் அறிமுகம் செய்த ஃப்ரீடம் 125 எனும் சிஎன்ஜி பைக்தான் இப்போது டாக் ஆஃப் தி ஆட்டோமோட்டிவ் ஏரியா. இந்த சிஎன்ஜி பைக்கைப் பொறுத்தவரை முக்கியமான 2 கேள்விகள் வாடிக்கையாளர்களிடம் இருக்கின்றன. 

முதல் கேள்வி - பெட்ரோல் ஸ்கூட்டர்களே அங்கங்கே எரிந்து கொண்டிருக்கின்றன? சிஎன்ஜி எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? இதற்கு என்ன கேரன்ட்டி? 

இதற்கு பஜாஜ் தனது க்ராஷ் டெஸ்ட் மூலம் பதில் சொல்லிவிட்டது. கார்களைப் போல தனது பைக்கையும் சுமார் 11 விதமான சோதனைகளுக்கு உட்படுத்தி டெஸ்ட் செய்துவிட்டது பஜாஜ். அதில் ட்ரக் ஒன்று பைக்கின் மீது ஏறியும் டேங்க்கிலிருந்து எந்த லீக்கேஜும் இல்லை. சிஎன்ஜி டேங்க்குக்கு எந்தப் பங்கமும் இல்லை என்பதைச் சொல்லும் வீடியோ செம வைரல். ஸ்கூட்டரை 64 கிமீ வேகத்தில் ஓடவிட்டு, சைடு இம்பேக்ட் க்ராஷ் டெஸ்ட் செய்த வீடியோவையும் வெளியிட்டது பஜாஜ். அதிலும் பாஸ் ஆனது ஃப்ரீடம் 125.

2 Litre Petrol Tank

இப்போது வாடிக்கையாளர்களிடம் இருக்கும் இன்னொரு கேள்வி - ‛இந்த சிஎன்ஜி டேங்க்கை ஏன் பெரிதாக வைக்கவில்லை? 2 கிலோ சிஎன்ஜி எப்படிப் போதுமானதாக இருக்கும்? அட்லீஸ்ட் பெட்ரோல் டேங்க்கையாச்சும் பெருசு பண்ணியிருக்கலாமே?’ என்கிறார்கள். 

அதற்கும் இப்போது பதில் சொல்லிவிட்டது பஜாஜ். பெட்ரோல் டேங்க்கைப் பொருத்தவரை - இதைத்தான் ஒரு முதன்மையான எரிபொருளாக வைத்து டிசைன் செய்திருக்கிறது பஜாஜ். சிஎன்ஜி என்பது Backupதான். அதாவது, சிஎன்ஜி டேங்க்கை ஃபில் செய்ய முடியாத பட்சத்தில் பெட்ரோல்தான் காப்பாற்றும். ‛‛மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிமீ கிடைப்பதால், இந்த 2 லிட்டர் டேங்க்கே போதும் என்கிற முடிவுக்கு வந்தோம்!’’ என்கிறது பஜாஜ். மேலும் சிஎன்ஜிக்கு ஒரு கிலாவுக்கு 102 கிமீ என்று, பைக்கின் மொத்த எரிபொருளுக்கும் சேர்த்து 330 கிமீ கிடைக்கும் என்றும் க்ளெய்ம் செய்கிறது பஜாஜ். 

Bajaj Freedom 125

மேலும், சிஎன்ஜி டேங்க்கைப் பொருத்தவரை அங்கேயும் 2 விஷயங்கள் முன்னே நிற்கின்றன. எடை மற்றும் தயாரிப்புச் செலவு. காலியான ஒரு சிஎன்ஜி டேங்க்கின் எடை 16 கிலோ. இதுவே முழுதாக நிரப்பப்பட்ட நிலையில் (Kerb Weight) இதன் எடை 18 கிலோ இருக்கும். இது ஒரு பல்ஸர் பைக்கின் பெட்ரோல் டேங்க்குக்கு நிகரான எடை.

Freedom Bike Ex-showroom Price

மேலும் இன்னொரு விஷயம் என்னவென்றால், ரைடிங்கின்போது பைக்கின் டைனமிக்ஸ் கெட்டுவிடக் கூடாது. அதாவது, காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் நிலைத்தன்மை, எடை அதிகமான டேங்க்கால் நிலைகுலைந்துவிடக் கூடாது. அதற்குச் சரியான எடைப் பகிர்ந்தளிப்பு (Weight Distribution) வேண்டும்.

‛‛இந்த பைக்கின் மொத்த எடை - 149 கிலோ. இதுவே சில 125சிசி கம்யூட்டர் பைக்குகளை விட எடை அதிகம் என்று கருதுகிறோம். இப்போது இந்த பைக் ஓட்டுவதற்கு ஈஸியாக இருக்கும். பெரிய டேங்க் வைத்திருந்தால், பைக்கின் மொத்த பேக்கேஜுமே பாதிக்கப்படும்!’’ என்கிறார் பஜாஜ் ஆட்டோவின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரியும், சேட்டக் டெக்னாலஜியின் தற்போதைய நிர்வாக இயக்குநருமான ஆப்ரஹாம் ஜோசப். 

CNG Filling

மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளைப் போலவே சிஎன்ஜி தயாரிப்பும் கொஞ்சம் காஸ்ட்லியான விஷயம்தான். 1 லட்சத்துக்குள் பைக்கின் விலையைக் கொண்டு வர இப்படி மெனக்கெட்டிருப்பதாகச் சொல்கிறது பஜாஜ். 

ஒரு காரில் சுமார் 10 கிலோ டேங்க் இருக்கும். ஆனால், 8.5 கிலோ சிஎன்ஜிதான் நிரப்ப முடியும். இதற்குக் காரணம் - அழுத்தம். சில பங்க்குகளில் ப்ரஷர் குறைவாக இருக்கும்பட்சத்தில், 7 கிலோ நிரப்புவதே கஷ்டமாக இருக்கும். ஃப்ரீடம்125 பைக்கில் இருப்பதோ 2 கிலோதான். அதனால் ‛தயவுசெய்து ப்ரஷரை அதிகமாக வைத்து நிரப்புங்கள்‛ என்றும் சிஎன்ஜி சப்ளையர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆப்ரஹாம். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.