பூந்தமல்லி கிளைச் சிறையில் திடீர் சோதனை: சிக்கிய செல்போன், சிம் கார்டுகள் - கைதிகள் மீது வழக்கு!

சென்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் சிலர் செல்போன்களைப் பயன்படுத்துவதாக சிறைக் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜேம்ஸ் லி பிரிட்டோ தலைமையில் சிறைக் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 1-வது பிளாக்கில் படிக்கட்டின் அடியில் உள்ள குடிநீர் குழாய் பகுதியில் ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை சிறைக் காவலர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அதை எடுத்துப் பார்த்தபோது அதற்குள் ஒரு செல்போன், இரண்டு சிம் கார்டுகள், மூன்று பேட்டரிகள் இருந்தன. அதைக் கைப்பற்றிய போலீஸார், செல்போனை சிறையிலிருந்து பயன்படுத்தியது யாரென்று விசாரித்தனர்.

செல்போன்

விசாரணையில் சிறைக்கைதிகள் மாறன் (23), நெல்லையைச் சேர்ந்த பாஸ்கர் (32) ஆகியோர் செல்போனைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜேம்ஸ் லி பிரிட்டோ என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சிறைக் கைதிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்குப் பிறகு இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறையில் இவர்களுக்கு எப்படி செல்போன், சிம்கார்டுகள், பேட்டரிகள் ஆகியவை கிடைத்தது என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதால், சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.