3-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வதை செய்து கொன்ற சிறுவர்கள்? - ஆந்திராவில் அதிர்ச்சி.. போலீஸ் விசாரணை!

ஆந்திராவில் 3-ம் வகுப்பு சிறுமி, 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, பாதிக்கப்பட்ட மூன்றாம் வகுப்பு சிறுமியின் தந்தை, முச்சுமரி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த தன்னுடைய மகள் காணாமல் போனதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

சிறுமி

அதன்படி, பூங்கா உள்ளிட்ட இடங்களில் தேடுதல் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் விசாரணை போன்ற நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டபோதும் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர், மோப்ப நாய் மூலம் போலீஸார் தேடுதலில் ஈடுபட்டபோது, சிறுமி படிக்கும் பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படித்துவரும் மூன்று சிறுவர்களின் வீட்டுக்கு மோப்ப நாய் சென்றது. அதைத் தொடர்ந்து அந்த மூன்று சிறுவர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுவர்கள், பூங்காவில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டு அதில் தாங்களும் சேர்ந்து பின்னர் அவரை முச்சுமரி பாசனத் திட்டம் அருகேயுள்ள தனி இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை அவர் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தால் பிரச்னை ஏற்படும் என்று அவரைக் கொன்று அருகேயுள்ள கால்வாயில் உடலை வீசிவிட்டு தப்பிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல்துறை

அதையடுத்து சிறுவர்களை போலீஸார் நேற்று கைதுசெய்த பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இருப்பினும், சிறுமியின் உடல் இன்னும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து முச்சுமாரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்சேகர் பேசுகையில், சிறுமியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் இந்த வழக்கை சிறுமி காணாமல் போன வழக்காகவே பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.