Rohit Sharma: பிசிசிஐ-யின் பரிசுத்தொகையில் பாரபட்சமா? - டிராவிட் வழியில் செல்கிறாரா ரோஹித்?

17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது.

பி.சி.சி.ஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான். அதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்குத் தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்பட்டன.

ராகுல் டிராவிட்

இதில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாயும் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள மற்ற பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. பயிற்சியாளராகச் செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு வீரர்களுக்கு இணையாக 5 கோடி ரூபாயை பி.சி.சி.ஐ வழங்கியிருக்கிறது. இதை ராகுல் டிராவிட் மறுத்திருக்கிறார். தனக்கு தங்களுடைய பயிற்சிக்குழுவுக்கு வழங்கப்படும் ரூ. 2.5 கோடி ரூபாயை மட்டுமே பரிசுத்தொகையாக வழங்கினால் போதும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் தனக்கு வழங்கப்பட்ட 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை தன்னுடைய அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு விட்டுத்தர இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அனைவருக்கும் அணியில் ஒரே மாதிரி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ கொடுக்காதது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா

இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மாவும் ராகுல் டிராவிட் வழியில் செல்ல முடிவெடுத்திருக்கிறார் என்று ரோஹித்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.