இளம் வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால் இவ்வளவு லாபமா..?
இளம் வயதில் சீக்கிரம் முதலீட்டை ஆரம்பித்தால் அதிக தொகுப்பு நிதி சேரும் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எப்படி என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
நாகு, கண்ணன் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒரே வயது உடையவர்கள் மட்டுமல்ல, ஒரே அலுவலகத்தில் வேலையும் பார்க்கிறார்கள். இவர்களின் அலுவலகத்துக்கு நிதி ஆலோசகர் ஒருவர் வந்தார். அவர் ஓய்வுக் கால முதலீட்டை (Retirement Investment) எப்படி மேற்கொள்வது என விளக்கிச் சொன்னார்.
இளம் வயதில் சீக்கிரம் முதலீடு செய்தால்..!
அப்போது அவர் இளம் வயதில் சீக்கிரம் முதலீடு செய்தால், அதிக தொகை முதலீடு செய்யத் தேவையில்லை. அதிக காலமும் முதலீடு செய்யத் தேவையில்லை என்றார்.
இதன்படி நாகு அவரின் 30 வயதில் மாதம்தோறும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund) திட்டங்கள் இரண்டில் தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.10,000 முதலீடு செய்ய ஆரம்பித்தார். இவர் அவரின் 40 வயது வரை அதாவது 10 ஆண்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்துவிட்டு நிறுத்திவிடுகிறார். ஆனால், முதலீட்டை 60 வயது வரை தொடர்கிறார். நாகு 10 ஆண்டுகளில் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ.12 லட்சம் ஆகும்.
இதுவே கண்ணன் அவரின் 40 வயதில்தான் முதலீட்டை ஆரம்பிக்கிறார். இவர் அவரின் 60 வயது வரைக்கும் மாதம்தோறும் ரூ.10,000 வீதம், சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். இவர் 20 ஆண்டுகளில் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ.24 லட்சம் ஆகும்.
இருவரின் முதலீட்டுக்கும் ஆண்டுக்குச் சராசரியாக 13% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். 60 வயதில் நாகு, கண்ணன் யாருக்கு அதிக தொகுப்பு நிதி (Corpus) சேர்ந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
கூட்டு வளர்ச்சி..!
நாகுவுக்கு அவரின் 60 வயதில் ரூ.2.84 கோடி கிடைக்கும். இதுவே கண்ணனுக்கு ரூ.1.1 கோடிதான் கிடைத்திருக்கும். கண்ணன் அதிக தொகையை முதலீடு செய்திருந்தாலும் அவரின் மொத்த முதலீட்டுக் காலம், நாகுவைவிட 10 ஆண்டுகள் குறைவாக இருந்ததால் அவருக்குக் குறைவான தொகை கிடைத்திருக்கிறது. கண்ணன் முதலீட்டை ஆரம்பிக்கும்போது, நாகு செய்திருந்த ரூ.12 லட்சம் முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 24.7 லட்சமாக அதிகரித் திருந்தது. இந்த ரூ24.7 லட்சம் அடுத்த 20 ஆண்டுகளில் கூட்டு வளர்ச்சியின் (Power of Compounding) அடிப்படையில், அதாவது வருமானத்துக்கு வருமானம் என்பதை வளர்ந்து வந்ததால் கண்ணனின் முதலீட்டைவிட அதிக தொகையைச் சேர்த்து கொடுத்திருக்கிறது. எனவே, ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக முதலீட்டை ஆரம்பிக்கிறாரோ அவ்வளவு அதிக தொகை அவருக்கு சேரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


