``விவாகரத்தான முஸ்லிம் பெண்கள், பராமரிப்புத் தொகை பெற உரிமையுண்டு - சுப்ரீம் கோர்ட்

இஸ்லாமியர்கள் விவாகரத்து பெற, முஸ்லிம் தனி நபர் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். மத்திய அரசு, ஏற்கெனவே முத்தலாக் முறைக்கு தடை விதித்துள்ளது. விவாகரத்து செய்து கொள்ளும் முஸ்லிம் பெண்களுக்கு பராமரிப்புத் தொகை அல்லது ஜீவனாம்சம் கொடுப்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. இதற்கு முந்தைய சட்டப்படி, விவாகரத்து செய்து கொள்ளும் முஸ்லிம் பெண்கள் விவாகரத்தான நாளில் இருந்து முதல் மூன்று மாதங்கள் பராமரிப்புத் தொகை பெற முடியும். குழந்தைகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் பராமரிப்பு செலவு பெற முடியும்.

இந்நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம், மொகமத் அப்துல் சமித் விவாகரத்து வழக்கில் அவர் தன் மனைவிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மொகமத் அப்துல் சமித் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இம்மனு நீதிபதி நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விவாகரத்து சட்டம் 1986-ன் கீழ், முஸ்லிம் பெண்கள் கிரிமினல் நடைமுறைச்சட்டம் 125வது பிரிவின் கீழ் ஜீவனாம்சம் கோர முடியாது என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, இவ்வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகள், ’’இரண்டில் எந்த சட்டத்தின் அடிப்படையில் பராமரிப்பு செலவை பெற வேண்டும் என்பதை முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்யவேண்டும். பராமரிப்பு என்பது பாலின சமத்துவத்தை செயல்படுத்துகிறது. அது ஒரு தொண்டு கிடையாது. 125-வது சட்டப்பிரிவு முஸ்லிம் உட்பட அனைத்து பெண்களுக்குமானது. தனிச்சட்டங்களை பொருட்படுத்தாமல், பலவீனமானவர்களை சமூக ரீதியாக பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவாகரத்தான பெண்கள் இரண்டு சட்டத்தின் கீழும் பராமரிப்புத் தொகை பெற உரிமை இருக்கிறது.

முஸ்லிம் பெண்களுக்கு 1986வது ஆண்டு சட்டம் இருந்தாலும், 125வது கிரிமினல் நடைமுறைச்சட்டத்தின் கீழும் பராமரிப்பு தொகை பெற உரிமை இருக்கிறது. விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் உரிமையை நாடாளுமன்றம் ஒருபோதும் கட்டுப்படுத்த விரும்பியதில்லை. 1986-ம் ஆண்டு இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியதன் நோக்கம், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கிரிமினல் நடைமுறைச்சட்டம் 125-வது பிரிவின் கீழ் என்ன உரிமைகள் வழங்கப்படுகின்றனவோ, அதைவிட கூடுதலாக உரிமைகள் கொடுப்பதாகும்.

1986-வது ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி முஸ்லிம் பெண்கள் விவாகரத்தாகி முதல் மூன்று மாதங்கள் மட்டுமே பராமரிப்புத் தொகை பெற முடியும். ஆனால், 125-வது கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விவாகரத்தான பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும்வரை பராமரிப்புத் தொகை பெற முடியும்’’ என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அதோடு, ’’விவாகரத்தான பெண்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பும் வரை அவர்களின் தந்தை பராமரிப்பு செலவு கொடுக்க 125வது சட்டப்பிரிவு வகை செய்கிறது. ஆனால், 1986-வது சட்டப்பிரிவு விவாகரத்தான பெண்களின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை இரண்டு ஆண்டுகள் மட்டும் பராமரிப்புத் தொகை கொடுத்தால் போதும் என்கிறது’’ என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, லட்சக்கணக்கான இஸ்லாமிய் பெண்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது என்கின்றனர் சட்ட ஆர்வலர்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.