Doctor Vikatan: புதிதாகத் திருமணமான பெண்கள் கர்ப்பத்தைத் தள்ளிப்போட காப்பர் டி போட்டுக்கொள்ளலாமா?

Doctor Vikatan: என் வயது 27. ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. இன்னும் ஒரு வருடம் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறோம். கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் உள்ளவை என்பதால் அவற்றைப் பயன்படுத்த பயமாக உள்ளது. நான் ஒரு வருட காலத்துக்கு கர்ப்பத்தைத் தள்ளிப்போட காப்பர் டி பயன்படுத்தலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மாலா ராஜ்.

இன்றைய நவீன மருத்துவ உலகில் ஏராளமான கருத்தடை முறைகள் வந்துவிட்டன. அவற்றில் யாருக்கு, எது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

இன்றைய காலத்தில் திருமணத்துக்கு முன்பான தாம்பத்திய உறவு அதிகரித்திருக்கிறது. மிக இளவயதில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதைக் கலைக்க மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு திருமணமான பிறகு கர்ப்பம் தரிப்பதில் பெரிய சிக்கல்கள் வரலாம். எனவே, எதிர்கால உடல்நலம், வாழ்க்கை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, திருமணத்துக்கு முன்பான தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப்போட நினைக்கிற இளம் பெண்கள் கருத்தடை முறை குறித்த ஆலோசனை கேட்டால், அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளைத்தான் பரிந்துரைப்போம். அதாவது குறைந்த டோஸ் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தாம்பத்திய உறவு கொண்டு, எதிர்பாராமல் கருத்தரித்துவிட்டவர்களுக்கு மருந்துகள் மூலம் அதைக் கலைக்க மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.  கருத்தரித்துவிடலாம் என பயப்படுகிற பெண்கள்,  தாம்பத்திய உறவு கொண்ட குறிப்பிட்ட இடைவெளியில் எமர்ஜென்சி கான்ட்ரசெப்ட்டிவ் பில்ஸ் (Emergency Contraceptive Pills) எனப்படும் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த மாத்திரைகள் தற்போது பெரிய அளவில் கிடைப்பதில்லை. 

கருத்தடை மாத்திரைகள்

திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்து, கருத்தடை ஆலோசனைக்காக மருத்துவரிடம் வரும் பெண்களுக்கு அவர்களது வயது, உடல்நலம் போன்றவற்றை எல்லாம் கேட்டறிந்து, அந்த முடிவு சரியானதுதானா என்று பார்ப்போம். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பது தெரிந்தால், அதை விளக்கிப் புரியவைப்போம். கர்ப்பத்தைத் தள்ளிப்போடுவதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் குறைந்த டோஸ் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளைத்தான் பரிந்துரைப்போம். அவர்களுக்கு காப்பர் டி மாதிரி, கர்ப்பப்பைக்குள் செலுத்தும் எந்தச் சாதனத்தையும் பொருத்திக்கொள்ள அறிவுறுத்த மாட்டோம். குழந்தைப்பேறு முடிந்துவிட்ட நிலையில், அந்தப் பெண்களுக்கு அவர்களது வயது, உடல்நலம் ஆகியவற்றுக்கேற்ப வேறு கருத்தடை முறைகளைப் பரிந்துரைப்போம். எனவே, உங்கள் விஷயத்தில் முதலில் மருத்துவ ஆலோசனை அவசியம். இப்போதுதான் திருமணமாகியிருக்கிறது என்ற நிலையில், காப்பர் டி உங்களுக்கான கருத்தடை முறையாக நிச்சயம் இருக்காது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.