XUV700: நல்லா விக்கிற காருக்கு இம்புட்டு லட்சம் தள்ளுபடியா? தாராள பிரபுவான மஹிந்திரா! என்னாச்சு?
பொதுவாக, மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு சலுகையெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது. ஆனால், தனது எக்ஸ்யூவி700 காருக்குச் சலுகைகளை அள்ளி வீசியிருக்கிறது மஹிந்திரா. கார் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிக்கிறதென்றால், அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். ஒன்று - அந்தக் கார், சேல்ஸ் சார்ட்டில் சொல்லிக் கொள்ளும்படி ரெக்கார்ட் செய்திருக்காது. இல்லையென்றால், அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இப்படிச் சில விஷயங்கள் இருக்கலாம்.
ஆனால், மஹிந்திரா இப்போது சலுகையை அறிவித்திருப்பது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் XUV700 காருக்கு. ‛‛என்னது, எக்ஸ்யூவி700 காருக்கு டிஸ்கவுன்ட்டா… ஏன் சரியா சேல்ஸ் ஆகலையா?’’ என்று கேட்டார் ஒரு நண்பர். அப்படியும் சொல்ல முடியாது; காரணம் - லாஞ்ச் ஆன 3 ஆண்டுகளிலிருந்து இப்போது வரை மொத்தம் 20,000 கார்களை விற்றிருக்கிறார்கள். மஹிந்திரா, இந்த காருக்கு 3-ம் ஆண்டைக் கொண்டாடி வருகிறது. அதற்காகத்தான் இந்தத் தள்ளுபடியாம்.
தள்ளுபடி தள்ளுபடினு சொல்றீங்களே… எம்புட்டுனு சொல்லமாட்றீங்களேனு நீங்க கதறுவது கேட்குது. XUV700 காரின் 16 வேரியன்ட்களுக்கும், சுமார் ஒன்றரை லட்சத்தில் இருந்து 2.19 லட்சம் வரை - அதுவும் எக்ஸ் ஷோரூம் விலையில் தள்ளுபடி அறிவித்திருக்கிறது மஹிந்திரா.
AX7 7 சீட்டர் டீசல் AWD AT மாடலுக்குத்தான் இந்த அதிகபட்ச 2.19 லட்சம் தள்ளுபடி. இதன் பழைய விலை ரூ.24.99 லட்சமாக இருந்தது. இப்போது 22.80 லட்சம். இதில் குறைந்தபட்சத் தள்ளுபடியான 1.45 லட்சம் என்பது AX7 L 6-Seater MT டீசல் காருக்கு அறிவித்திருக்கிறார்கள். இதன் பழைய விலை ரூ.24.14 லட்சம். லேட்டஸ்ட் விலையாக 22.69 லட்சம் வருகிறது. மற்ற வேரியன்ட்கள் அனைத்துக்கும் சகட்டுமேனிக்கு 1.90 லட்சம் முதல் 2.05 லட்சம் வரை டிஸ்கவுன்ட் தொடர்கிறது. இந்த டிஸ்கவுன்ட் எக்ஸ் ஷோரூமிலேயே கொடுக்கப்படுவதால், ஆன்ரோடு விலை என்று வரும்போது வாடிக்கையாளர்கள் இன்னும் பல ஆயிரங்கள் லாபம் பார்க்கலாம்.
இதில் XUV700 காரின் AX7 வேரியன்ட் என்பது சொகுசுக்குப் பெயர் பெற்றது. நீங்கள் ஒரு ஃபார்ச்சூனர் வாங்குவதற்குப் பதில் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 வாங்கிவிடலாம் என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது. காரணம் - ஃபார்ச்சூனரில் இல்லாத பல வசதிகள் இதில் உண்டு. பனோரமிக் சன்ரூஃப், டூயல் 26.03 இன்ச் HD சூப்பர் ஸ்க்ரீன், லெவல்-2 அடாஸ் தொழில்நுட்பம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், 6-வே பவர்டு மெமரி சீட், அமேஸான் அலெக்ஸா கனெக்டிவிட்டி, சோனியின் 3டி ஆடியோ கொண்ட 12 வகையான ஸ்பீக்கர்கள் என்று வெறித்தனம் காட்டுகிறது XUV700.
எல்லாம் ஓகேதான்! அப்படியே இன்னொண்ணையும் பேசிக்கிறாங்க வாடிக்கையாளர்கள். என்னவென்றால், எக்ஸ்யூவி காரை புக் செய்துவிட்டு, மிஸ்டர் பீன் கணக்கா காத்துக்கிட்டிருக்கிறதுக்குப் பதிலா வேற மாடலுக்கும் போய் விடலாம் என்பதும் உண்மையாகவே இருக்கிறது. கொஞ்சம் அந்த வெயிட்டிங் பீரியட்டையும் என்னனு பாருங்க மஹிந்திரா!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

