`மூத்த தார மகனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்... - ஓய்வுபெற்ற IAS அதிகாரியின் மனைவி புகார்!

ஜம்மு காஷ்மீரில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இரண்டாவது மனைவி, தன்னுடைய கணவருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த மகனால் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக போலீஸில் புகாரளித்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து வெளியாகியிருக்கும் தகவலின்படி, போலீஸில் புகாரளித்திருக்கும் 40 வயது பெண், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஆதரவற்ற இவர், கடந்த 2020-ல் ஜம்மு காஷ்மீர் கேடரின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் திருமணம் செய்துகொண்டார்.

பாலியல் வன்கொடுமை

இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இத்தகைய சூழலில்தான், தன்னுடைய கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் நேற்று, உத்தரப்பிரதேச போலீஸிடம் புகாரளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில், ``என் கணவரின் முதல் மனைவி, அவர்களுக்குப் பிறந்த மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகின்றனர். இந்தத் துன்புறுத்தல் பல ஆண்டுகளாகப் பல மடங்கு அதிகரித்துவந்தது. ஏப்ரல் 11 முதல் 14 வரை ஒரு அறையில் நான் அடைத்துவைக்கப்பட்டேன். சாப்பாடின்றி பட்டினியால் வாடினேன். என் கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகன், என்னுடைய செல்போனை என்னிடமிருந்து பறித்துவிட்டார்.

FIR

பின்னர், அவரும், அவரின் உதவியாளரும் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதையடுத்து, யார் மீதும் போலீஸில் எந்தப் புகாரும் அளிக்க மாட்டேன் எழுதிக்கொடுத்து, பலமுறை கெஞ்சிய பிறகு இதுபற்றி வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என்ற மிரட்டி, என்னை விடுவிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறை

புகாரில் குறிப்பிட்டுள்ளபடி, அந்த இளைஞன் கொலை மிரட்டலுடன் அவரை லக்னோவில் விட்ட பிறகு, இவர் போலீஸில் இந்த புகாரை அளித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அபிஜித் சங்கர், இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.