Ma Dong Seok: பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வாங்கா கூட்டணி; வில்லனாகும் இந்த கொரியன் நடிகரைத் தெரியுமா?

பிரபாஸ் நடித்திருக்கிற கல்கி 2898 AD திரைப்படம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து சலார் -2, ஸ்ப்ரிட், தி ராஜா சாப் ஆகிய திரைப்படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இதில் ஸ்ப்ரிட் படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் கபூரை வைத்து அனிமல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான அனிமல் பார்க் திரைப்படத்தைத் தொடங்குவதற்கு முன்பு பிரபாஸுடன் இணைந்து ஸ்ப்ரிட் படத்தை முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இது பிரபாஸின் 25வது திரைப்படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

Sandeep Reddy vanga

தற்போது இத்திரைப்படத்தின் தகவல் ஒன்று சமூக வலைத்தளமெங்கும் வைரலாக பரவி வருகிறது. இத்திரைப்படத்தில் கொரியன் நடிகரான மா டோங் சியோக் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல்தான் தற்போது பேசப்பட்டு வருகிறது. இன்றைய இணையவாசிகளிடம் மா டோங் சியோக் குறித்துக் கேட்டால், "இன்ஸ்டாகிராமில் பூனை முகம் பொறித்த பொருட்களைப் பயன்படுத்தி ரீல்ஸ் பதிவிடுவாரே!" என உடனடியாக பதிலளிப்பார்கள். ஆனால், இவரின் உண்மையான முகம் அதுவல்ல.

கொரியன் திரையுலகில் தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராகத் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் மா டோங் சியோக். இவரைத் தென் கொரியாவில் லீ டோங் சியோக், டான் லீ எனப் பல பெயர்களைக் கொண்டு அழைப்பார்கள். இவர் கரியரின் தொடக்கத்தில் தி நைபர், தி அன்ஜஸ்ட் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். எந்தவொரு காரியத்தையும் முழுவீச்சோடு கையாண்டால் வெற்றி கைகளுக்குக் கிடைக்கும் என்ற கூற்றையே இவரும் பின்பற்றி கடுமையாக உழைத்து உலகமெங்கும் பிரபலமானார்.

Ma Dong Seok

2016-ல் இவர் நடித்திருந்த டிரெயின் டு பூசான் என்ற ஜாம்பி திரைப்படம் பெரியளவிலான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அதில் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிப்பை வழங்கி அதிரடி காட்டினார் மா டோங் சியோக். இந்த டிரெயின் டு பூசான் திரைப்படத்திற்குப் பிறகு கொரியன் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இவரும் இணைந்து முக்கிய செலிபிரிட்டியாக உருவெடுத்தார்.

இதன் பிறகு தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில், தி ரவுண்டப் போன்ற திரைப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து அதிலும் தன்னை நிரூபித்தார். இதுமட்டுமில்லாமல், இவர் நடித்த படங்களெல்லாம் தென் கொரியாவில் அதிகம் வசூலிக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையிலும் இடம் பெற்றிருக்கின்றன. மா டோங் சியோக்கின் மிரட்டும் பொர்பாமென்ஸை பார்த்த மார்வெல் ஸ்டுடியோஸ் இவரை ஹாலிவுட்டுக்கு அழைத்து நடிக்க வைத்தது. மார்வெல் யுனிவர்ஸின் 26வது திரைப்படமான எடெர்னல்ஸ் திரைப்படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் அறிமுகமானார்.

Ma Dong Seok in Eternals

நடிப்பு என்ற ஒன்றோடு தனது கரியரை சுருக்கிக் கொள்ளாமல் படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். தற்போது இவர் தயாரித்திருக்கும் ஹோலி நைட்: டிமான் ஹன்டர்ஸ் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இதையெல்லாம் தாண்டி நடிப்பின் பக்கம் வருவதற்கு முன்னாள் தற்காப்புக் கலையையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தென் கொரியாவைச் சேர்ந்த சில குத்துச் சண்டை வீரர்களுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தற்காப்புக் கலைகளைத் தாண்டி கை மல்யுத்தத்திலும் நாட்டம் கொண்டு ஈடுபட்டிருக்கிறார்.

சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் ஸ்ப்ரிட் திரைப்படத்தில் மா டோங் சியோக் நடிப்பது உறுதியானால் அதுதான் இவர் நடிக்கும் முதல் இந்தியத் திரைப்படமாக இருக்கும்!

வி ஆர் வெயிட்டிங்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.