மதுபோதையில் பள்ளி வாகனம் ஓட்டிய 23 ஓட்டுநர்கள்... காவல்துறையின் சோதனையால் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது கிரிமினல் குற்றம். இதற்கு 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனையும், குற்றத்தின் தீவிரம் பொறுத்து, அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். அதனால், அரசும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை விழிப்புணர்வு மூலம் எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று (செவ்வாய் கிழமை) காலை கர்நாடக காவல்துறை, பெங்களூரின் பல்வேறு இடங்களில், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை இலக்கு வைத்து, பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன், பஸ் ஓட்டுநர்களை சோதித்திருக்கிறது. இதில் மொத்தம் 3,016 பள்ளி வாகனங்கள் சோதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சோதனையில்தான் அதிர்ச்சித் தகவலாக 23 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்திருக்கிறது.
இந்த 23 ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் உடனடியாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களின் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, RTO அதிகாரிகளால் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஓட்டுவதற்கு தகுதிச் சான்றிதழ் இல்லாத 11 வாகனங்களையும் காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி,``பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அக்கறையற்று இருந்த கல்வி நிறுவன நிர்வாகங்கள் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஓட்டுநர்கள் பிடிபட்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

பள்ளிக் குழந்தைகள் பயணத்தின் போது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது இன்றியமையாதது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பள்ளி வாகனம் ஓட்ட அனுமதிக்காதபடி பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களால் வரையறுக்கப்பட்ட விதிகளில்தான் செயல்பட முடியும். எனவே, இதுபோல் இனி நடக்காமல் இருக்க பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது தார்மீக அழுத்தம் கொடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

