சேலம்: கண்ணை மறைத்த போதை; பாலியல் கொடூரத்துக்கு ஆளான பள்ளி மாணவிகள் - அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், வயிற்று வலி என சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், அச்சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்து வருவது தெரிந்து பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்மூலம் மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்மூலம் போலீஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் ஆண் நண்பர்கள் சிலர் தனக்கு மது பழக்கத்தை ஏற்படுத்தி, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மேட்டூர் காவல் நிலைய வட்டாரங்களில் விசாரித்தபோது, “சம்பந்தப்பட்ட பாதிப்புக்குள்ளான சிறுமியின் பெற்றோர்கள் தின கூலிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதில், அடிக்கடி பெற்றோர்களுக்குள்ளேயே சண்டை நிலவி வந்து தந்தை வீட்டுக்கே வராமல் இருந்துள்ளார். தாயும் கடந்த 6 மாத காலமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தங்களது இரண்டு பெண் குழந்தைகளையும் கவனிக்க தவறவிட்டுவிட்டனர். சிறுமியும், சிறுமியின் 16 வயதுடைய அக்காவும் அருகில் இருக்கக்கூடிய பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின், அக்காவின் 17 வயது தோழி ஒருவர் ஒரே பகுதி என்பதால், அடிக்கடி வீட்டுக்கு படிக்க வருவது, விளையாட வருது என்று இருந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் நங்கவள்ளியைச் சேர்ந்த 20 வயதுடைய கமலக்கண்ணன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) என்பவர் மேட்டூர் பேருந்து நிலையத்தில் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர். அடிக்கடி வெளியில் பைக்கில் சுற்றுவது என்று இருந்துள்ளனர். இவர்கள் வெளியில் செல்லும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது அக்காவுக்கு செல்போனில் காட்டி வந்துள்ளார். இதனால் அவர்களுக்கும் இதுபோன்று வெளியில் சுற்ற வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது.
அதன் மூலம் சம்பந்தப்பட்ட தோழியும் கமலக்கண்ணனை கடந்த 6 மாதத்திற்கு முன் சிறுமிக்கும், சிறுமியின் அக்காவுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதில், ஏற்கனவே அறிமுகமான தோழிக்கு கமலக்கண்ணன், `பியர் குடித்தால் நல்லா அழகாகிடலாம். இன்னும் கொளு கொளுன்னு இருப்ப’ என்று ஆசை வார்த்தையெல்லாம் கூறி முதலில் பியர் குடிக்க பழக்கியுள்ளார். பின்னர் நாளடைவில் மது பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதிலிருந்து மீள முடியாத அவர் தினமும் எப்படியாவது தனக்கும் மது வாங்கிக் கொடுக்க கூறி கேட்டு வந்துள்ளார். அப்படி வாங்கி கொடுக்க வேண்டுமென்றால், நான் சொல்வதை கேட்க வேண்டும் உனது தோழிகளையும் அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்மூலம் சிறுமியின் அக்காவிடம் பியர் சாப்பிடலாமா கமலக்கண்ணன் வாங்கிக் கொண்டு வருவதாக கூறினார் என்றுள்ளார். அதற்கு இதெல்லாம் குடிக்கக்கூடாது தப்பு வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்னையாகிடும் என்று கூறியுள்ளனர். ஆனால் வலுக்கட்டாயமாக அவர்களை தோழி மூளைச்சலவை செய்து குடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அப்படி குடிக்க செல்லும் போது பியர்ருக்கு பதில் மதுவை கலந்து கொடுத்து, சிறுமியையும், அவரது அக்காவையும் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியுள்ளார் கமலக்கண்ணன். மதுபோதைக்கு அடிமையான சிறுமிகள் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில், கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் சிவசங்கர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு மூன்று சிறுமிகளுக்கு மது வாங்கிக் கொடுப்பது, அவர்கள் போதையில் மயக்கத்தில் இருக்கும் போது உடலுறவு கொள்வது என அத்துமீறியுள்ளனர்./
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் 15 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சைக்காக மேட்டூரில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் உடலில் மாற்றம் இருப்பதை அறிந்து ஸ்கேன் எடுத்து வரக் கூறியுள்ளார்.
அதன்மூலம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதன்மூலம் மேட்டூர் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்மூலம் சிறுமியை தவறான வழிக்கு கொண்டுச் சென்ற தோழி மற்றும் அவரது ஆண் நண்பர்கள் 2 பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றனர்.

மேலும் மேட்டூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் இளவரசியிடம் பேசியபோது, “சிறுமி முதலில் தனியார் கிளினிக் தான் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு மருத்துவர் ஸ்கேன் எடுத்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியதால், அவர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அதன்பின் தான் சிறுமி 3 கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தற்போது அவருக்கு இங்கேயே சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றார்.
சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் பேசியபோது, “தமிழ்நாட்டிலேயே அதிக அளவிலான குழந்தை பருவ கர்ப்பிணிகள் இருப்பது சேலம் மாவட்டத்தில் தான். காரணம், குழந்தைகளுக்கான பல துறைகள் இயங்கினாலும், அவை யாவும் சரியாக இயங்குவதில்லை, குறிப்பாக குழந்தைகள் உதவி மையம் (சைல்டு லைன்), மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை என பல்வேறு துறைகள் இருந்தும், இது போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. பள்ளி, கல்லூரிகள், கிராமங்களில் மக்களைத் தேடி விழிப்புணர்வு அளித்தால் தான் இனி வரும் காலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்” என்றனர்.
மேலும் இது தொடர்பாக மேட்டூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதியிடம் பேசியபோது, “சிறுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தோழி உள்பட 3 பேர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது விசாரணை சென்று வருவதால் தற்போது எதுவும் கூற முடியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

