`இரவு போனில் நீண்ட நேரம் பேசினோம், காலையில் இறந்த தகவல் வந்தது’ -கேப்டன் மனைவியின் நெகிழ்ச்சி வீடியோ
கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி, உலகின் உயரமான மலைப்பகுதியாகக் கருதப்படும் சியாச்சின் பகுதியில் ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த டாக்டர் கேப்டன் அன்ஷுமான் சிங், ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் மற்ற ராணுவ வீரர்களை காப்பாற்றிவிட்டு, தனது உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி முர்மு இவ்விருதை கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்க்கு வழங்கினார். இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சியாச்சினில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், கேப்டன் அன்ஷுமன் சிங் தனது சொந்த பாதுகாப்பை பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் பலரை காப்பாற்றினார். அவரது வெளிப்படையான துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவருக்கு கீர்த்தி சக்ரா (மரணத்திற்குப் பின்) வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அன்ஷுமான் சிங்கின் அம்மாவுடன் கலந்துகொண்ட அவரின் மனைவி ஸ்மிருதி சிங், விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்ட தருணம் மிக நெகிழ்ச்சியானதாக அமைந்தது.
அதை தொடர்ந்து, ஸ்மிருதி சிங் பேசிய வீடியோ ஒன்றை பாதுகாப்புத்துறை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது. அதில், ஸ்மிருதி சிங் தனக்கும் கணவருக்குமான காதல், கல்யாணம், இறுதி போன் கால் பற்றியெல்லாம் பகிர்ந்திருக்கும் விஷயங்கள், பலரையும் நெகிழச் செய்துள்ளது.
அந்த வீடியோவில் ஸ்மிருதி சிங், ’’நான் கல்லூரியில் முதல் நாள் அவரை சந்தித்தேன். பார்த்தவுடன் அவர் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் ராணுவ மருத்துவக் கல்லூரியில் படிக்க அவர் தேர்வு செய்யப்பட்டார். பொறியியல் கல்லூரியில் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். ஆனால், அவர் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு மாத காதலுக்குப் பிறகு, 8 ஆண்டுகள் நாங்கள் தொலைதூர காதலில் இருந்தோம் (Long distance relationship). அதன் பிறகு, நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால், திருமணமான இரண்டு மாதங்களில் அவர் சியாச்சின் பகுதிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.
2023-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி இரவு நானும் அவரும் நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டோம். அடுத்த 50 ஆண்டுகளுக்கு இருவரது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்தும், புதிய வீடு கட்டுவது குறித்தும், குழந்தைகள் குறித்தும் நீண்ட நேரம் பேசினோம்.
ஆனால், ஜூலை 19-ம் தேதி காலையில் அவர் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அடுத்த 7 - 8 மணி நேரத்திற்கு அந்தத் தகவலை நாங்கள் நம்பவே இல்லை. இப்போது, கையில் கீர்த்தி சக்ரா விருதுடன் நிற்கிறேன். இது உண்மையாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
நாங்கள் எங்களது வாழ்க்கையை நிர்வகித்துக்கொள்ள முடியும். அவர் ஹீரோ. மற்ற 3 ராணுவ வீரர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்ற தனது உயிரை கொடுத்து இருக்கிறார்’’ எனக் கூறியவர், வீடியோவில் தனது கண்ணில் வழிந்த நீரை துடைக்க முயல்கிறார்.

2023-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி, கேப்டன் சிங் சியாச்சினில் பணியில் இருந்தபோது அங்கு இருந்த ஆயுதக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. உள்ளே சிக்கிக்கொண்டவர்களை கேப்டன் சிங் உடனடியாக மீட்டார். ஆனால், தீவிபத்தில் சிக்கிக்கொண்ட மருத்துவ உபகரணங்களை எடுக்கச் சென்றபோது சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார் .ஜூலை 22-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரில் கேப்டன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது, சோஷியல் மீடியாவில் வெளியான அந்த வீடியோவை பார்த்த பலரது கண்களில் கண்ணீர் துளிகள் வராமல் இல்லை.
இப்போது, ஸ்மிருதி சிங்கின் இந்த வீடியோவும் பலருக்கும் கண்களில் நீர் திரளச் செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

