ரூ.5 கோடி வேண்டாம்; 2.5 கோடி போதும்! - பரிசுத்தொகையைக் குறைத்துக் கேட்கும் டிராவிட் - காரணம் என்ன?

உலகக்கோப்பையை வென்றதற்காக பிசிசிஐ வழங்கிய ரூ.5 கோடி ரூபாய் பரிசுத்தொகையை மறுத்து ரூ.2.5 கோடி மட்டுமே போதும் என டிராவிட் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது. பி.சி.சி.ஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான். அதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

கோப்பை வென்ற இந்திய அணி

இதனைத் தொடர்ந்து உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்பட்டது. இதில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாயும் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள மற்ற பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பயிற்சியாளராகச் செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு வீரர்களுக்கு இணையாக 5 கோடி ரூபாயை பிசிசிஐ வழங்கியிருக்கிறது. இதை ராகுல் டிராவிட் மறுத்திருக்கிறார். தனக்கு தங்களுடைய பயிற்சிக்குழுவுக்கு வழங்கப்படும் ரூ,2.5 கோடி ரூபாயை மட்டுமே பரிசுத்தொகையாக வழங்கினால் போதும் என்று பெருந்தன்மையாகக் கூறியிருக்கிறார். வீரர்களுக்கு இணையான பரிசுத்தொகையை அவர் பெறவில்லை.

ராகுல் டிராவிட்

இதேபோல் 2018-ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை வென்றபோதும் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், வீரர்களுக்கு 30 லட்சம் ரூபாயும் துணை ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது. அப்போதும் ராகுல் டிராவிட் அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.