பயிற்சியின்போதே காரில் சிவப்பு, நீல விளக்கு; தனிஅலுவலம் - `செல்வாக்கு’ காட்டிய பெண் IAS இடமாற்றம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேட்கர். உதவி மாவட்ட ஆட்சித்தலைவரான பூஜா, பயிற்சியில் இருக்கும் போது தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறப்பு சலுகைகள் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். ஆனால் பயிற்சி அதிகாரிகளுக்கு வழக்கமாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கொடுப்பது கிடையாது. பூஜா பயிற்சியாளராக வேலைக்கு வந்தவுடன் தன்னை மாவட்ட ஆட்சித்தலைவர் போன்று நினைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தார். தனது சொந்த காரில் அரசின் ஒப்புதல் இன்றி சிவப்பு மற்றும் நீல கலர் விளக்கு பொருத்திக்கொண்டார்.

அவரது நடவடிக்கையை பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் சுஹாஸ் அதிர்ச்சி அடைந்தார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் மேலும் அடுத்தடுத்து அவர் செய்த செயல்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு தனி அலுவலகம் கொடுக்கப்படுவது கிடையாது. ஆனால் பூஜா தனது தந்தைக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்தார்.

அதாவது பூஜாவிற்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கும்படி பூஜாவின் தந்தை மாவட்ட ஆட்சித்தலைவர், கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்தார். பூஜாவின் தந்தை மகாராஷ்டிரா மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியாவார். அந்த செல்வாக்கை பயன்படுத்தி தனது மகளுக்கு சலுகைகள் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தார். பூஜா தனக்கென தனி லெட்டர்பேட், பெயர்பலகை, தனி அலுவலகம், தனக்கு பணியாற்ற தனி ஊழியர் கேட்டு நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

அதோடு கூடுதல் கலெக்டருக்கான அலுவலகத்தை அவருக்கு தெரியாமல் தனது சொந்த அலுவலகமாக பயன்படுத்த ஆரம்பித்தார். இச்சலுகைகள் பயிற்சி காலத்தில் கிடையாது என்று எடுத்துக்கூறியும் பூஜா கேட்கவில்லை. இதையடுத்து அவரது செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில அரசுக்கு புகார் கடிதம் எழுதினார். இதனிடையே பூஜா தனது காரில் மகாராஷ்டிரா அரசு என்றும் பெயர் பலகை வைத்துக்கொண்டார்.

தொடர் புகாரை தொடர்ந்து பூஜாவை மாநில அரசு வாசிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த பூஜாவின் தந்தை மட்டுமல்லாது தாத்தாவும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஆவர். பூஜா 2022ம் ஆண்டு ஐ.எஸ்.ஏ.தேர்வில் வெற்றி பெற்றார். பூஜா மீது இலாகா பூர்வ விசாரணையும் நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் பூஜாவின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.