Aadhaar - Sim Card link Scam: நூதன மோசடியில் ரூ.80 லட்சத்தை இழந்த பெண் - உஷார் மக்களே..!

டிஜிட்டல் இந்தியா பிரசாரத்தின் விளைவாக நாடுமுழுவதும் பணப்பரிவர்த்தனை முதல் பெரும்பாலான அரசு நடவடிக்கைகள் வரை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் மோசடிகளும் அதிகரித்திருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த டிஜிட்டல் யுகத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதும் தொடர்கதையாகிவிட்டது. ஒவ்வொரு முறை ஒருவர் ஏமாறும்போதும் காவல்துறை ஏமாறாமல் இருக்க பல்வேறு வழிகளை, எச்சரிக்கைகளை வழங்குகிறது.

ஆன்லைன் மோசடி | online scam

ஆனால், மோசடி செய்பவர்கள் பல்வேறு புதிய புதிய வடிவில் மோசடிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

Aadhaar - Sim Card link Scam!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நூதன மோசடியால் ரூ.80 லட்சத்தை இழந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அழைத்தவர் தன்னை மும்பை காவல்துறை அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார்.

மேலும், அந்தப் பெண்ணின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு எதிராக 24 பண மோசடி வழக்குகள் இருப்பதாகவும், அதனால் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இதை உறுதிப்படுத்தவே அழைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை

இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண், தன்மீது எந்த குற்றமும் இல்லை, தான் எந்த மோசடியிலும் ஈடுபட்டதில்லை எனத் தெரிவித்ததும், இந்த வழக்கிலிருந்து அந்தப் பெண்ணை வெளியே கொண்டுவரவும், சட்ட சிக்கல்களை சரி செய்யவும், ரூ.80 லட்சம் செலுத்த வேண்டும். ஒருவேளை அந்தப் பெண் குற்றமற்றவர் எனத் தெரியவந்தால், அந்தப் பணம் திரும்ப செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை நம்பிய அந்தப் பெண் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கும் முயற்சியில், தன்னிடமிருந்த ரூ.80 லட்சம் பணத்தை அழைத்தவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றியிருக்கிறார். பணம் செலுத்தப்பட்டவுடன், தொடர்பு உடனடியாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே இது மோசடி என உணர்ந்திருக்கிறார். இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். அதன் பிறகே இந்த செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தற்போது சைபர் க்ரைம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.