ஏரி, கண்மாய்களில் கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க அனுமதி; 150 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்!

தமிழக அரசின் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்நிலைகளில் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்டணமின்றி மண் எடுப்பதற்கான பணி ஆணைகளை பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் / குளம் / கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள், விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

இதன்மூலம் விவசாயிகள் பயன்பெறுவதோடு, ஏரி / குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு, அதில் அதிக மழைநீரைச் சேமிக்கவும் இந்தத் திட்டம் உதவும். இத்திட்டத்தினை எளிதாக செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் அரசு ஆணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள் 12.06.2024 அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மண்பாண்டத் தொழில்

நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையை சேர்ந்த செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் / உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு, இத்திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டும் நெறிமுறைகள், 25.06.2024 அன்று இயற்கை வளங்கள் துறையால் வெளியிடப்பட்டது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வோர்  tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.  அவை சரிபார்க்கப்பட்டு அதன்பின் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் மற்றும் அவர்கள் வசிக்கும் தாலுகாவில் இருக்கும் நீர்நிலைகளிலும், வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரி

இதுகுறித்து மூத்த பொறியாளர் வீரப்பனிடம் பேசியபோது, "தமிழ்நாட்டில் சுமார் 39,000 ஏரி, கண்மாய்கள் இருக்கின்றன. இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எவ்வளவு ஆழத்துக்கு தோண்ட வேண்டும் என்பதை மட்டும் துறை சார்ந்தோர் பார்த்துக் கொண்டால் போதும். மற்றபடி தண்ணீர் சேகரிப்பதற்கு அருமையானதொரு அரசின் முயற்சி.

வீரப்பன்

தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களை முறையாகத் தூர்வாரினாலே 150 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும் என்று சொல்லி வருகிறோம். தற்போது அரசின் உத்தரவுபடி ஏரி, கண்மாய்களில் மண் எடுக்கப்பட்டால் 150 டி.எம்.சி தண்ணீர் சேகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏரி, கண்மாய் தூர்வாருவதற்கு ஒதுக்கப்படும் நிதியும் மிச்சமாகும். முதற்கட்டமாக இதைச் செய்துவிட்டு, அடுத்தகட்டமாக கட்டுமான நிறுவனங்கள், நெடுஞ்சாலை துறையினருக்கு 1 யூனிட் மண் இவ்வளவு விலை என்று விற்பனை செய்தால் அரசுக்கு வருமானமும் கிடைக்கும். நீர்நிலைகளை ஆழப்படுத்தியது போன்றும் இருக்கும். இதை சரியான கண்காணிப்போடு நடத்தினால் பெரிய பலன்களை அறுவடை செய்யலாம்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.