சாவியுடன் காருக்குள் சிக்கிய குழந்தை, ஏர்பேக் அபாயம், தீயணைப்பு அதிகாரிகளின் மீட்பு முயற்சி!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த வெங்ஙானூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்து. இவரின் 2 வயது மகன், ஆரவ். நேற்று காலை நந்து தன் வீட்டின் முன் சாலை ஓரத்தில் தனது காரை நிறுத்தி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, நந்துவின் மகன் ஆரவ் கார் சாவியுடன் காருக்குள் சென்று அமர்ந்துகொண்டு விளையாடியுள்ளான். எதிர்பாராத விதமாக, ரிமோட் கீயை தெரியாமல் அழுத்தி காரின் அனைத்து டோர்களையும் லாக் செய்துவிட்டது குழந்தை.

இதை அறிந்த நந்து, என்ன செய்வது எனத் தெரியாமல் வீட்டுக்குள் இருந்த டூப்பிளிகேட் சாவியை தேடியுள்ளார். ஆனால், அவசரத்தில் சாவி கிடைக்கவில்லை. அப்பகுதியினரும் சென்று பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. என்ன செய்வது எனத் தெரியாத நந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் உதவியை நாடினார்.

மீட்கப்பட்ட குழந்தை

விழிஞ்ஞம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். குழந்தை கையில் இருந்த ரிமோட் கீ-யின் பட்டனை அழுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரி ஒருவர், முன்பக்க கண்ணாடி வழியாக வாக்கி டாக்கியின் பட்டன்களை அழுத்தி சைகை காட்டினார்.

இதற்கிடையே, வீட்டினருக்கு டூப்ளிகேட் சாவி கிடைத்துள்ளது. தீயணைப்புத் துறையினர் டூப்பிளிகேட் சாவி மூலம் கார் டோரை திறந்து சிறுவனை மீட்டனர். காரின் அனைத்து டோர்களும் லாக் ஆனதால் சுமார் ஒரு மணி நேரம் குழந்தையை மீட்க முடியாமல் பெற்றோரும், அப்பகுதியினரும் தவித்த நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை காரிலிருந்து மீட்கப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் செய்திகளில் இடம்பிடித்தது.

காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் முயற்சி

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காரை உடைத்தால் ஏர்பேக் சிஸ்டம் செயல்பட்டு குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் இருந்ததால், காரை உடைத்து மீட்கும் முயற்சியை உடனடியாக எடுக்கவில்லை. நாங்கள் செல்லும்போது குழந்தை காருக்குள் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்ததால் நிதானமாக செயல்பட எங்களுக்கு நேரம் கிடைத்தது. எனவே, வாக்கி டாக்கியை காட்டி அதுபோன்று சிறுவனையும் செய்ய வைத்து கார் கீ-யின் ரிமோட் பட்டனை அழுத்த வைக்க முயன்றோம். அந்த முயற்சி நடந்துகொண்டிருந்தபோதே வீட்டினருக்கு டூப்பிளிகேட் சாவி கிடைத்தால் சிரமம் இல்லாமல் குழந்தையை மீட்க முடிந்தது" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.